Tuesday, October 3, 2023
Home » வழிபாட்டின் வேர்களைத் தேடி…3

வழிபாட்டின் வேர்களைத் தேடி…3

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சமய வழிபாடுகளும் சமூக நிலைபேறும்

முனைவர் செ. ராஜேஸ்வரி

தனிமனிதனாக இருக்கும் ஒவ்வொருவரையும் கூட்டு வாழ்க்கைக்குள் இணைத்து குடும்பமாகவும் குடியாகவும் குலமாகவும் இனமாகவும் இணைப்பது சமூகம் ஆகும். இச்சமூகம் என்ற கூட்டு வாழ்க்கை முறை நிலைபேறு அடைவதற்கு, நிலைத்து நிற்பதற்குச் சமய வழிபாடுகள் பேருதவி புரிகின்றன. சமயம் என்ற அச்சினை கொண்டு சமுதாயம் என்ற சக்கரம் சுழல்கின்றது. இந்த அச்சு சுழற்சியின் மூலமாகவே காலம் மக்களின் வாழ்க்கையை இழுத்துக் கொண்டு செல்கின்றது. ஆக ஒவ்வொரு மனிதனின் நிம்மதியான வாழ்க்கைக்கும் சமயம் ஒரு காரணமாக விளங்குகின்றது.

சமயத்தை நிலைபெறச் செய்ய வழிபாடுகள் உதவுகின்றன. வழிபாடுகள் இல்லை என்றால் சமயம் இருக்காது. சமயம் இல்லை என்றால் தனி மனிதர்கள் சமூகமாக சேர்ந்து வாழாமல் சிதறிப் போவார்கள். Individualism என்ற பெயரில் இந்நிலை இன்றைக்கு மெல்ல மெல்ல வந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். எனவே சமூகம் என்ற கூட்டு வாழ்க்கை முறையை மீண்டும் வலியுறுத்தவே உலகெங்கும் பல நாடுகளில் கடவுள் நம்பிக்கையும் வலதுசாரித் தன்மையும் இன்று மேலோங்கி வருவதைக் காண்கிறோம். (சமயம் மற்றும் சமூகத்திற்கு இடையிலான ஆக்கப்பூர்வமான தொடர்புகளை எமிலிடர்கிம், பெல்லா, டால்காட் பார்சன்ஸ், மாலினோவ்ஸ்கி போன்றோர் ஆராய்ந்து விரிவாக விளக்கியுள்ளனர். அச்சமூகவியலாரின் கருத்துக்களை இக்கட்டுரை எளிமையாக்கித் தந்துள்ளது.)

சமயத்தின் வலிமை

சமயம் என்பது காலத்தால் பழமையானதும் ஆற்றல்மிக்கதும் ஆகும். சமயம் ஒரு சமூகத்தின் தனிமனித வாழ்க்கை மேம்படவும் கூட்டு வாழ்க்கை சிறப்படையவும் உதவுகின்றது. ஒரு சமூகத்தில் ஒழுங்கு முறைகளையும் (discipline) சமூக மதிப்புகளையும் (social values) பண்பாட்டு நடைமுறைகளையும் (cultural behaviour) சமயத்தின் துணைகொண்டு தான் சமூகம் உருவாக்குகிறது.

வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.மனிதன் வாழ்வாங்கு வாழ வழிமுறைகளைக் காட்டுவது அவன் வாழும் இடம், இனம், மொழி, மதம் முக்கியத்துவம் பெற்ற சமூகம் ஆகும். அவனைத் தெய்வத்தோடு நீ வைக்கப்படுவாய் என்று சொல்லி நம்ப வைக்க சமயம் என்ற கருதாக்கமே சமூகத்துக்கு உறுதுணையாக உள்ளது.

வழிபாடு

சமயம் என்ற நாணயத்தின் இன்னொரு பக்கமாக விளங்குகின்ற வழிபாடு என்பது ஒழுக்கம், கட்டுப்பாடு, விரதம், நோன்பு போன்ற நடைமுறைகளால் தனிமனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதோடு சமூகத்தோடு அவன் இணைந்து செயல்படவும் உறுதுணை புரிகின்றது. சமயமும் வழிபாடும் இல்லாவிட்டால் மக்களின் வாழ்க்கை கட்டுப்பாடற்றதாக ஒவ்வொருவரும் தன்னிச்சையோடு செயல்படுவதாக அமைந்துவிடும். வழிபாடுகள் சமூகத்தின் ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவதற்கு அடிப்படைக் காரணமாக விளங்குகின்றது.

இறைவனை வணங்கி எந்தச் செயலையும் தொடங்க வேண்டும். விநாயகருக்குத் தேங்காய் உடைத்தால் விக்கினங்கள் சிதறிப் போகும். குலதெய்வக் கோயில்களில் அன்னதானம் செய்ய வேண்டும். ஒரு செயல் நிறைவடையும்போதும் வீடு கட்டி முடிக்கும் போதும் சொத்து வாங்கும் போதும் திருமணம், சாவு போன்ற வேளையிலும் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் உணவு வழங்க வேண்டும் என தான தர்மம், என்பதும் வழிபாட்டின் ஒரு பகுதியாகிறது. இதனால் தனி நபர் இன்ப துன்பங்களில் சமூகமும் சேர்ந்து பங்கேற்கிறது.

மேலும் தப்பு செய்தால் கடவுள் கண்ணைக்குத்தும், மேலே இருந்து கடவுள் பார்க்கிறார், தப்பு செய்யாதே, ஏதேனும் திடீர் துன்பம் வந்தால் குல தெய்வக் குற்றமாக இருக்கும், போய் சாமி கும்பிட்டு வா என்று அறிவுறுத்தியும் வழிபாட்டுச் சடங்குகளின் பெயரால் மக்களை இச் சமூகம் நெறிப்படுத்துகிறது. சமயங்கள் கடவுளைக் காட்டி கடவுளின் அதீத சக்தியை நினைவூட்டி, தண்டனை கொடுக்கும் பழக்கத்தையும் எடுத்துரைத்து மக்களை அச்சுறுத்தி ஒழுக்க சீலர்களாக மாற்ற முயற்சிக்கின்றது.

கடவுள் நம்பிக்கை இல்லாத சமயம் சமூகத்தின் பொறுப்புள்ள ஓர் அங்கமாக தனி மனிதன் விளங்குவதற்கு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில ஒழுக்க விதிகளை அவன் மீது திணிக்கின்றது. அவன் அந்த ஒழுக்க விதிகளை மீறும் போது சமூகம் அவனைப் புறந்தள்ளி விடுகின்றது. இங்கு சமூகமே சமயத்தை அதிகாரம் செய்கிறது. சமூகம் காலத்துக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. காலத்துக்கு ஏற்ற படி சதி, கைம்மை நோன்பு, குழந்தை திருமணம் என தனக்கு வேண்டாத சமூக நடைமுறைகளை விலக்கி விடவும் சமூகம் மக்களைத் தூண்டுகிறது. இதனால் சமயம் என்பது சமூகத்தின் பிரதிபலிப்பாக விளங்குவதை உணரலாம்.

காலத்தின் தொடர்ச்சி

சமயம் தன்னுடைய கருத்துக்களை விதிமுறைகளை தலைமுறை தலைமுறையாகக் காலம் காலமாகத் தனி நபர் மீது புகுத்திக் கொண்டே வருகின்றது. திருமணம் செய்து கொடுக்கும் போது மணப்பெண்ணுக்குப் பூஜை பொருட்களைத் தாய் வீட்டில் இருந்து சீதனமாக கொடுப்பதற்குக் காரணம் வழிபாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். இவை பண்பாட்டு விதிகளாக காலப்போக்கில் நிலை பெற்று விடுகின்றன. பெண் வீட்டாரிடம் இன்னின்ன பொருட்கள் இந்த எண்ணிக்கையில் வெள்ளியில் தர வேண்டும் என்று திருமணத்தின் போது வரன் வீட்டார் கட்டாயப்படுத்திக் கேட்கின்றனர். எனவே, சமயமும் சமூகமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல் இருப்பதால் இந்தியப் பண்பாடு என்பது இந்துசமயப் பண்பாடு என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது.

சமயத்தை மாற்றி விடும் சமூகம்

பௌத்தர்கள் இந்துக்களாக இருந்தாலும் குபேர பூஜை அல்லது லட்சுமி பூஜையை தீபாவளி அன்று செய்தனர். அன்று அவர்களுக்கு நீத்தார் நினைவு நாள் கிடையாது. சமணர் வாழ்ந்த பகுதியில் தீபாவளி அன்று மங்கலப் பழக்க வழக்கங்கள் இருக்காது. நல்லெண்ணெய் தேய்த்து தலை முழுகி ஆட்டுக்கறி சாய்த்து சாப்பிடுதல் என வேறுபட்டு காணப்படும். நரகாசுரன் வதம் என்ற கதை தீபாவளி அன்று எல்லா சமயங்களுக்கும் சந்தோஷங்களுக்கு இடம் அளித்தது. ஆக மக்களின் சாமிகள் மாறினாலும் சடங்குகள் மாறவில்லை.

வழிபாடு என்பது சாமிக்கு செய்யப்படுவது என்ற பெயரில் நடைபெற்றாலும் அவை சமூகத்தின் ஒருங்கிணைப்புக்காகவே பெரிதும் நடைபெற்றன. கிராமங்களில் (நாட்டார் வழக்காற்றில்) ஒரு சாமியைக் கும்பிடுகிறவர்கள் ஒரு குலமாகவும் கூட்டமாகவும் கருதப்பட்டனர். அவர்கள் தாயாதிகளாக இருப்பதனால் தங்களுக்குள் அதாவது ஒரே கூட்டத்திற்குள் திருமணம் செய்வது கிடையாது. இங்கு ஒரு சமூகம் என்பது ஒரு சமயம் அல்லது ஒரு வழிபாடு சார்ந்து இயங்குகிறது. குல வழிபாடு என்பது ஒரு குலத்திற்குரிய ஒழுக்க விதிகளை, உணவு முறைகளை, திருமணம் முறைகளைக் கட்டுப்படுத்துகின்றது அல்லது உருவாக்குகின்றது.

குல தெய்வ வழிபாட்டுக்குரிய சமூக விதிமுறைகள்

குலதெய்வங்களின் பெயர்கள் பொதுப் பெயர்களாக திரௌபதி காளியம்மன், மாரியம்மன் என்று மாறி இருந்தாலும் கூட அந்த குறிப்பிட்ட குடும்பத்தினர் அல்லது ஊரைச் சேர்ந்தவர் அல்லது ஒரு தொழில் செய்பவர்கள் மட்டுமே அந்தக் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமை பெற்றவர்கள் ஆவர். அதே தொழில் செய்கின்ற அந்தக் குடும்பத்தோடு சம்பந்தம் செய்தவர்கள் அந்தக் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய அனுமதி கிடையாது.

குலதெய்வ வழிபாடு என்பது தாயாதிகளின் வழிபட்டதாக அதாவது தாத்தா, அப்பா, மகன், பேரன் என்ற வழியில் வழிபடு தெய்வமாக ஒரு தெய்வத்தைக் கொண்டிருப்பதாகும். இவர்களுடன் திருமண உறவு கொண்ட குடும்பத்தார், சம்பந்திகளுக்கு இந்தத் தெய்வமும் இந்தக் கோயிலும் சொந்தம் ஆகாது. ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு வந்திருந்த பெண்கள் மனைவிமாருக்கு இத்தெய்வம் குலதெய்வமாக மாறிவிடும்.

அவர்களின் தந்தையார் வீட்டுத் தெய்வத்தை பெண் அடி தெய்வம் என்று அழைப்பார்கள். அதாவது மகளின் வழியாக பெண்ணின் வழியாக வந்த தெய்வம். ஆனால், அதைப் பெரும்பாலும் அப்பெண்கள் திருமணத்துக்குப் பின் போற்றுவது கிடையாது. பெண்கள் தங்கள் கணவன்மார் வீட்டுத் தெய்வத்தையே தமது குலதெய்வமாகக் கொள்ள வேண்டிய விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. சமயத்தின் வழியாக சமூகம் மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளைக் கட்டுப்படுத்துகிறது என்பதற்கு குல தெய்வ வழிபாடு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நாத்திகமும் சமூக விதிகளும்

கடவுள் வழிபாடு இல்லாமல் நாத்திகர்களாக பலர் வாழ்கின்றனர். சில சமூகங்களும் இருக்கின்றன. இவற்றிற்கு சமய அடையாளங்கள் இல்லாவிட்டாலும் கூட சமூக அடையாளங்கள் உண்டு. அவை மொழி, இனம், தொழில் சார்ந்த அடையாளங்களைக் கொண்டிருக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளில் கடவுள் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. என்றாலும் அவர்களின் தேசிய கீதம், தேசியக்கொடி மற்றும் வரலாற்றுச் சின்னங்களில் மத அடையாளங்களை இன்றும் வைத்துப் போற்றி வருகின்றனர்.

சிறிய அளவில் தனி நபர் என்ற அளவில் இங்கு சமயமும் வழிபாடும் மறைந்து கொண்டிருந்தாலும் பெரிய அளவில் தேசியம் என்று வரும்போது அங்கு மதச் சின்னங்களும் அடையாளங்களும் வழிபாடுகளும் சடங்கு முறைகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தவை போலவே இன்றும் இருந்து வருவதைக் காணலாம். இவர்கள் செக்யூலரிசம் என்று பேசினாலும் கூட கோஷம் போடும்போது ‘God bless America’ என்று கோஷம் போடுவார்கள். பலர் பேச்சு வழக்கில் God என்ற சொல்லை உச்சரிக்க கூட விரும்பாமல் Gosh என்பர். ஒலிப்பின் வேறுபாடு தானே தவிர கஷ்ட நஷ்டங்களில் கடவுளே என்று கூறும் பழக்கம் மாறவில்லை. வார்த்தை மாறி இருக்கின்றது இதனை கடவுள் வெறுப்பாகக் கூட கொள்ளலாம். ஆனால் மரபு மாற்றம் கிடையாது. கடவுளே என்று கதறும் மரபு என்றும் Gosh என்று கதறும் பழக்கமாகத் தொடர்ந்து வருவதைக் காணலாம்.

உயர் பதவியில் இருப்பவர்கள் பதவி ஏற்கும்போதும் அல்லது அவர்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கும்போது அது அரசனுக்குரியவையாக ஆட்சித் தலைவருக்கு உரியவையாக இருந்தாலும் அவை சமயச்சடங்குகள் போலவே உள்ளன. எனவே, அங்கும் சாமி பெயர் இல்லாவிட்டாலும் சடங்குகள் அப்படியே தான் தொடர்கின்றன. நாத்திகரிடம் கடவுள் என்ற சொல்லும் நம்பிக்கையும் படம், சிலை போன்றவையும் இருக்காதே தவிர சடங்குகள் அப்படியே தான் இருக்கும். மாலை அணிவித்தல், பத்தி புகைத்தல், வணங்குதல், நன்றி செலுத்துதல், வாழ்த்து வேண்டுதல் போன்ற சடங்குகள் கடவுள் நம்பிக்கை உடையவர்க்கும் இல்லாதவருக்கும் பொதுவானவை.

வழிபாட்டின் சமூக நன்மைகள்

கடவுள் வழிபாடு மூலமாக இயங்கி வரும் சமயமானது வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை வழங்குகின்றது. இம்மை, மறுமை, சொர்க்கம், நரகம் போன்றவை மனிதனுடைய பல வினாக்களுக்கு விடை தருகின்றது. ஏன் நல்லவனுக்கு வறுமை ஏற்படுகிறது? ஏன் இளையவனுக்கு திடீர் மரணம் ஏற்படுகின்றது? போன்ற விடை தெரியாத வினாக்களுக்கு சமயம் பதிலளிக்கின்றது. மேலும் உன்னுடைய வாரிசுகள் வளமாகவும் நலமாகவும் இருப்பதற்கு என்னென்ன முறைகளை நீ பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை சமயத்தின் வழியாக சமூகம் கற்பிக்கின்றது. சமூகத்திற்கு புறம்பான சமய விதிகள் எதுவும் நடைமுறையில் கிடையாது.

ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லி இதனை விளக்கலாம். ஒரு மனிதன் இறைவனிடம் எல்லாமே விதிப்படி நடக்கின்றது என்றால் என்னுடைய முயற்சி எதற்கு? நான் ஏன் வேலைகளைக் கஷ்டப்பட்டு செய்ய வேண்டும்? என்று கேட்டான். அப்போது கடவுள் அவனிடம் சில செயல்கள் அல்லது சில நாட்கள் உன்னுடைய விருப்பப்படி உன்னுடைய உழைப்பு மற்றும் முயற்சியின்படி நடக்கும் என்பது உனக்கு எழுதப்பட்ட விதியாக இருந்தால் அந்த நாட்களில் நீ செய்பவை உனக்கு பலன் தரும் அல்லவா? எனவே, அந்த நாட்கள் எதுவென்று தெரியாத காரணத்தினால் நீ எல்லா நாட்களிலும் உன்னுடைய அறிவையும் முயற்சியையும் செயல்படுத்து என்று இறைவன் பதில் அளித்தார்.

இங்கு சமயம் விதி என்று ஒரு காரணத்தைக் கற்பித்தாலும் மனிதன் அந்த விதியைக் கண்டு சோர்ந்து போய்விடாமல் இருக்க விதியை மதியால் வெல்லலாம் என்று கூறி இது போன்ற கதைகளையும் எடுத்துச் சொல்லி மனிதர்களை விதியின் பெயரிலும் சொந்த மதி மற்றும் உழைப்பின் பேரிலும் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை உற்சாகமாக கொண்டு செல்வதற்கு சமயமும் சமூகமும் இணைந்து செயல்படுகின்றன.

சமூகமும் சமயச் சடங்குகளும்

சமயமும் வழிபாடும் மனிதனின் உளவியல் தேவைகளை நிறைவேறுகிறது. அவனுக்கு வாழ்வில் சில தேவைகள் வரும்போதும் சில இடர்ப்பாடுகள், தடுமாற்றங்கள் தோன்றும் போதும் கடவுள் வழிபாடு அவனுக்கு உளவியல் ரீதியாக உதவுகிறது. சிக்கலான மனநிலையில் அவனுக்கு ஆறுதல் அளிப்பதும் மனோ தைரியம் கொடுப்பதும் கடவுள் வழிபாடு ஆகும். இதனால் ஆணுடைய வாழ்வில் பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகள் பெண்ணின் வாழ்வில் பூப்படைதல் மற்றும் வளைகாப்பு போன்ற நிகழ்வுகள் சமூகத்தில் சடங்கியல் முக்கியத்துவம் பெறுகின்றன.

சமயத்துக்கு சமயம் இவை வேறுபட்டாலும் கூட ஒவ்வொரு சமயமும் சடங்குகளால் நிலை பெற்றுள்ளது. சமூகம் என்பது இச்சடங்குகளை தொடர்ந்து செய்து வரும்படி வலியுறுத்தி சமயத்தைக் காப்பாற்றி வருகின்றது. பிறப்புச் சடங்கு இறப்புச் சடங்கு போன்றவை சாதி மத அடிப்படையில் வேறுபட்டாலும் அவற்றை தனி மனிதர்கள் என்ற அளவில் எவரும் செய்யத் தவறுவது கிடையாது. ஏதேனும் ஒரு முறையில் பிறப்பு இறப்பு சடங்குகளைச் செய்து வருகின்றனர்.

சாமி அல்லது சமயம் என்பது இங்கு வழிபாடு மற்றும் வாழ்வியல் சடங்குகளைத் தொடர்ந்து நடத்தி வருவதற்கான ஓர் அச்சுறுத்தல் கருவியாக உள்ளன. வீட்டுப்பாடம் எழுதுவது மாணவரின் வேலை. அது எழுதவில்லை என்றால் அவர்களைக் கண்டிப்பதும் தண்டிப்பதும் ஆசிரியரின் கடமை. இங்கே, மாணவர் மக்களாகவும் ஆசிரியர் சமூகமாகவும் கண்டித்தல் என்பது சமயமாகவும் விளங்குகின்றன.

நிறைவு

சமயத்துக்கும் சமூகத்துக்கும் இடையிலான தொடர்பை ஐந்து கருத்துக்களாக உணரலாம்.

1. வாழ்க்கைக்கு அர்த்தமும் நோக்கமும் கற்பிக்க சமயம் உதவுகிறது
2. சமூக ஒற்றுமை மற்றும் நிலைப்பாட்டுக்கு சமயம் உதவுகிறது
3. மனித நடத்தைகளின் மீதான சமூக கட்டுப்பாடுகளைச் சமயம் உறுதி செய்கிறது
4. உளவியல் மற்றும் உடலியல் ரீதியான நன்மைகளை சமயம் மக்களுக்கு வழங்குகிறது.
5. சமூகத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்படுவதற்கு சமயம் ஊக்கமளிக்கின்றது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?