*சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டி : குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் பூத்து குலுங்கும் சேவல் கொண்டை மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பல்வேறு தாவரங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு, இங்கு நடவு செய்யப்பட்டன. இவற்றில் சில மரங்களில் பூக்கும் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஒரே சமயத்தில் இந்த மலர்கள் பூக்காமல், ஒவ்வொரு சீசனிலும், அதாவது வேறுபட்ட மாதங்களில் பூப்பதால், சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
இந்தநிலையில் நீலகிரியில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சாலையோரங்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் ஸ்பேத்தோடியம் கேம்பனுலேட்டா எனப்படும் சேவல் கொண்டை மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான வழியில், சேவல் கொண்டை மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இது சாலையில் பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்த மலர்கள் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலும் சிவப்பு நிறத்தில் கொத்து கொத்தாய் மலர்ந்துள்ள இந்த மலர்களால் குன்னூர் மலைப்பாதை சிவப்பு கம்பளம் விரித்தது போன்று காட்சியளிக்கிறது. மேலும் ஐரோப்பிய கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இவ்வகை பூக்கள் ஆங்கிலேயர் காலத்தில், குன்னூரில் அதிகளவில் நடவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.