திருவொற்றியூர்: எண்ணூர், தாழங்குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் (25). கூலிதொழிலாளி. இவர், நேற்று மதியம் மாதவரம் லோட்டஸ் காலனியில் உள்ள தனியார் அலுமினிய நிறுவனத்தின் சிமென்ட் மேற்கூரையை மாற்றும் பணியில் சக ஊழியர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கூரை ஓடு உடைந்து சுமார் 60 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் விரைந்துவந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனிடையே சக்திவேலின் உறவினர்கள் விபத்து நடந்த நிறுவன வாசலில் திரண்டு, பணியில் ஈடுபட்டிருந்த சக்திவேலுக்கு உரிய கவசங்கள் வழங்கவில்லை. விபத்து நடந்தபோது உடனடிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.
எனவே உடலை வாங்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சக்திவேலின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த புழல் சரக காவல் உதவி ஆணையர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் நிறுவன அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.