*திருமணம் செய்து வைத்த போலீசார்
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிக்கு, போலீசார் திருமணம் செய்து வைத்தனர்.பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டி நாகலூரை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் நவீன்(27). இவர், பிஎஸ்சி நர்சிங் படித்து விட்டு, சேலம் சீலநாய்க்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அதே மருத்துவமனையில், சேலம் அரியானூரைச் சேர்ந்த முருகேசன் மகள் சபீதா(23) என்பவரும் பணிபுரிந்து வந்தார்.
இருவரும் கடந்த ஓராண்டுக்கு மேல் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததால், நேற்று தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி போலீசில் தஞ்சமடைந்தனர். எஸ்ஐ கெய்க்வாட், இருவரது பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருவரது அவர்கள் சமாதானம் அடைந்தனர். காதல் ஜோடி இருவரும் மேஜர் என்பதால் இருளப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் குமார், புதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் நவீனுக்கும்-சபீதாவுக்கும் போலீசார் திருமணம் நடத்தி வைத்தனர்.