ரசாயனம் சேர்க்காமல், இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் பொருட்களுக்கும், வீட்டுத் தயாரிப்புகளுக்கும் தற்போது வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இல்லத்தரசிகள் மற்றும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்கள், எளிதாக தயாரித்து விற்பனை செய்வதற்கு ஏற்றது ‘ஆர்கானிக் ரோஜா எண்ணெய்’.முதலில் இதை சிறிய அளவில் தயாரித்து உபயோகப்படுத்தி பாருங்கள். பிறகு இதன் பயன்களைக் கூறி நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் விற்பனை செய்யலாம். இதன் மூலம் பலன் அடைபவர்கள், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பரிந்துரை செய்வார்கள். ஆர்கானிக் ரோஜா எண்ணெய் தயாரிப்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
தேவையானவை: ஆர்கானிக் ரோஜா பூக்கள் – 2 கப், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் – ½ கப்.
செய்முறை: ஆர்கானிக் ரோஜா பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை தண்ணீரில் போட்டு அலசி, சுத்தப்படுத்துங்கள். அந்த ரோஜா இதழ்களை மெல்லிய பருத்தித் துணியில் போட்டு ஈரம் நீங்கும் வரை உலர்த்துங்கள். பின்னர் அவற்றை மிக்ஸியில் போட்டு ¼ கப் தண்ணீர் ஊற்றி பசைபோல் அரைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றுங்கள். பின்பு அதனுடன் ரோஜா விழுதை ேசர்த்து மிதமான தீயில் கிளறுங்கள். சிறிது நேரம் கழித்து ரோஜா இதழ்களின் நிறம் மாறி, எண்ணெய் பிரிந்து மேலே நிற்கும். அப்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். பாத்திரத்தை ஒரு வலை தட்டு போட்டு மூடிவையுங்கள். சாதாரண தட்டு கொண்டு மூடினால், நீராவித் துளிகள் எண்ணெயில் கலந்துவிடும். இதனை 5 முதல் 6 மணி நேரத்துக்கு அப்படியே வைத்து விடுங்கள்.பிறகு சுத்தமான பருத்தித் துணியைக் கொண்டு எண்ணெயை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். ஒரு பங்கு ரோஜா எண்ணெயுடன் பத்து மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்தவும். ரோஜா இதழ்கள் கருகிவிடாமல் எண்ணெயை கவனமுடன் காய்ச்ச வேண்டும்.
நன்மைகள்: ஆர்கானிக் ரோஜா எண்ணெயை குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கு உபயோகிக்கலாம். இது சருமம் மற்றும் கூந்தல் வறட்சி அடைவதை தடுக்கும். கண்களுக்கு கீழ் படரும் கருவளையத்தை நீக்கும். புருவமுடிகளை அடர்த்தி யாக்கும். நகங்களுக்கு உறுதியும் பளபளப்பும் அளிக்கும். சருமத்தின் சுருக்கங்களை நீக்கி இளமையான தோற்றம் தரும்.
தலைமுடி காக்கும் நெல்லி!
* காலை உணவுக்கு முன் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடவும்.
* காலை உணவு முடிந்தப் பின் ஒரு கடலை மிட்டாய் சாப்பிடவும்.
* மதிய உணவுக்கு முன் ஒரு கிளாஸ் மோர் அதில் சிறிது கறிவேப்பிலை (அ) இளநீர் குடிக்கவும்.
* மதிய உணவு பச்சைக் காய்கறிகளுடன் சாப்பிடவும்.
* ஒரு நாள் பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, சுரைக்காய், முருங்கைக்கீரை, பசலைக்கீரை, மட்டன் (அ) மீன் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். சிக்கன் என்றாவது ஒரு நாள் மட்டும். தினமும் வேண்டாம்.
* மாலையில் ஆரஞ்சு ஜூஸ், சாத்துக்குடி, மாதுளை, பீட்ரூட் ஜூஸ் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளவும். (அ) பயிறு வகைகளில் ஏதாவது ஒன்று.
* இரவு உறக்கத்துக்கு முன் ஒரு நெல்லிக்காய், டார்க் சாக்லேட் சாப்பிடவும்.
* இரவில் பரோட்டாவை தவிர்ப்பது நல்லது. தூங்கும் முன் 5 பாதாம் சாப்பிடவும்.
* குறைந்தது எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்.
* வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்தல். இந்த முறையைக் கடைப் பிடிக்க, முடியின் ஆரோக்கியம் மேம்படும்.
– N. குப்பம்மாள்
– அ.ப.ஜெயபால்