மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோகித்சர்மா, விராட் கோஹ்லி அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். 38 வயதான ரோகித்சர்மா மோசமான பார்ம் காரணமாக ஓய்வை அறிவித்த நிலையில், 36 வயதான கோஹ்லி ஓய்வை அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 2, 3 போட்டியில் மட்டுமே ஆட விரும்புவதாக ரோகித்சர்மா தெரிவித்துள்ளார். இதனால் அவரை டெஸ்ட் அணியில் சேர்க்க தேர்வர்கள் விரும்பவில்லை என்பதால் அவர் ஓய்வை அறிவித்ததாக கூறப்படுகிறது.
இதே நேரத்தில் விராட் கோஹ்லி ஓய்வை அறிவித்தது அவரது சொந்த முடிவு என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஓய்வுபெறப்போவதாக பிசிசிஐயிடம் கூறிய நிலையில் அதனை மறுபரிசீலனை செய்யுமாறு கூறவில்லை என கிரிக்கெட் வாரிய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலில் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி ஏ பிளஸ் கிரேடில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம் வழங்கப்படும். ஆனால் டி.20 கிரிக்கெட்டை தொடர்ந்து டெஸ்ட்டிலும் இருவரும் ஓய்வை பெற்றுவிட்டதால் அவர்களின் ஒப்பந்த கிரேடு குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், இருவரின் கிரேடு ஏ பிளஸ் ஒப்பந்தம் தொடரும். இருவரும் டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த பின்னரும் அவர்களின் கிரேடு ஏ பிளஸ் ஒப்பந்தம் தொடரும். அவர்கள் இன்னும் இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக உள்ளனர், கிரேடு ஏ பிளசின் அனைத்து வசதிகளையும் அவர்கள் பெறுவார்கள்” என்று அவர் கூறினார்.
கம்பீரின் கை ஓங்கியது
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்ற முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், அணியின் சூப்பர் ஸ்டார் வீரர் கலாச்சாரத்தை ஒழிக்க முடிவு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கோஹ்லி, ரோகித் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் அணியில் அவரின் ஆதிக்கம் ஓங்கி உள்ளது. அணி தேர்வு, ஆடும் லெவன், என அனைத்து முடிவுகளையும் கம்பீர் எடுப்பார். அவரது கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தற்போது அணியில் எந்த வீரரும் இல்லை. கேப்டனை விட அதிக அதிகாரம் கொண்டவராக பயிற்சியாளர் கம்பீர் திகழ்வார்.