*5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை
ஜோலார்பேட்டை : ஏலகிரி மலைச்சரிவில் சுமார் 5 ஆண்டுகள் பழமையான இரும்புக்கால மக்களின் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுலாத்தலமாக விளங்கும் ஏலகிரி மலைச்சரிவில் திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியரும் தொல்லியல் வரலாற்றியல் ஆய்வாளருமான பிரபு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், முத்தமிழ்வேந்தன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் இரும்புக்கால பண்பாட்டைச் சேர்ந்த மக்களின் மிகப்பெரிய பாறை ஓவியத்தொகுதி கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரபு கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் உள்ள 102 ரெட்டியூர் என்ற ஊரின் மேல்புறம் ஏலகிரி மலைச்சரிவில் மக்கள் வழிபாட்டில் உள்ள ஒரு குகையில் பாறை ஓவியங்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர்களின் உதவியோடு அங்கே சென்று களஆய்வு மேற்கொண்டோம்.
ஊரின் மேற்புறம் உள்ள ஏலகிரிமலையில் தரைத்தளத்தில் இருந்து ஏறத்தாழ 1000 அடி உயரத்தில் இயற்கையாக அமைந்த மலைக்குகையில் மிகப்பெரிய பாறை ஓவிய தொகுப்பு காணப்படுகிறது. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இவை அமைக்கப்பட்டவையாக இருக்கலாம். தற்போது மக்களால் வழிபடப்படும் இந்த குகையானது 50 பேருக்கு மேல் தங்கும் அளவுக்கு விசாலமாக உள்ளது.
குகையின் முகப்பில் 3 தொகுதிகளாக பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மொத்தமாக 80க்கும் மேற்பட்ட மனித உருவங்கள் விலங்குகளின்மேல் அமர்ந்து ஆயுதங்களோடு போரிடுவதாக காட்டப்பட்டுள்ளது.
சண்டையிடும் மனிதர்கள் இருவரின் இடுப்பில் குழந்தையின் உருவங்களும் காட்டப்பட்டுள்ளது. இன்னொரு ஓவியத்தொகுதியில் பாய்ந்துவரும் சிறுத்தையை விலங்கின் மீது அமர்ந்த ஒரு மனிதன் ஆயுதத்தில் தாக்குவதாக வரையப்பட்டுள்ளது.
இந்த ஓவியத்தொகுதிகள் அனைத்தும் விலங்குகளை வேட்டையாடுவதில் ஏற்பட்ட சண்டையாக பதிவிடப்பட்டுள்ளன. அந்த சண்டையில் வெற்றி பெற்றவர்களது கொண்டாட்ட நிகழ்வும், இனக்குழு தலைவனை பல்லக்கில் சுமந்துசெல்வது போலவும் வரையப்பட்டுள்ளன.
வெண்மைநிறத்தில் வரையப்பட்டுள்ள மனித உருவங்களின் கரங்களில் ஆயுதங்கள் காட்டப்படுவதால், இவை இரும்புக்காலகட்டத்தைச் சேர்ந்த பண்பாடாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒன்றுபட்ட வேலூர் மற்றும் வடமேற்கு தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படாத மிகப்பெரிய பாறை ஓவியத் தொகுதியாக இவை அமைந்திருப்பது வரலாற்று ஆய்வாளர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பழங்காலத்தில் மக்கள் பெரும்பாலும் இயற்கையான குகைத்தளங்களில் வாழ்ந்தனர். அக்கால மக்கள் தங்களது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியதால் ஓவியங்களை வரைந்திருக்கலாம் அல்லது ஒரு இனக்குழு மக்கள் மற்றவர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தமது அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்திருக்கலாம்.
இப்பாறை ஓவியங்கள் தமிழகத்தில் முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டு வரலாற்றினையும் அறிய முக்கியமான வரலாற்று ஆவணமாக திகழ்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.