*கிராம மக்கள் பீதி; அதிகாரிகள் ஆய்வு
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை அருகே கெடமலையில், 800 அடி உயரத்தில் இருந்து பாறை உருண்டு அடிவாரத்தில் விழுந்ததால் கிராம மக்கள் பீதிக்குள்ளானதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே கெடமலை அடிவார பகுதியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விவசாயம், கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கெடமலை மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவில் கன மழை பெய்தது. இதனால், மண் ஈரப்பதம் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆர்.புதுப்பட்டி கெடமலை அடிவாரத்தில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. உடனே, அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது, சுமார் 800 அடி உயரத்தில் இருந்து பெரிய அளவிலான பாறை கற்கள் உருண்டோடியபடி அடிவாரத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகே வனப்பகுதியில் விழுந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், ராசிபுரம் தாசில்தார் சரவணன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறைனர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தொடர் மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டதால் பாறைகள் உருண்டு விழுந்திருப்பதும், நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளுக்க வாய்ப்பில்லை என்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் இது பற்றி தகவல் அளித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அடிவாரப் பகுதியில் வசிக்கும் கிராம மக்களிடையே பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.