டெக்சாஸ்: அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் டாக்ஸி சேவையை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக டெக்சாஸ் மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ள ரோபோ டாக்ஸி சேவை பயணிகளை கவர்ந்து வருகிறது. அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தானியங்கி ரோபோ டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரத்தில் நேற்று அதிகாரபூர்வமாக ரோபோ டாக்ஸி சேவை தொடங்கியது. முதற்கட்டமாக தெற்கு ஆஸ்டின் நகரில் மட்டும் ரோபோ டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. செயலியில் முன்பதிவு செய்தால் ரோபோ டாக்ஸி பயணி இருக்கும் இடத்திலேயே வந்து பிக்-அப் செய்து கொள்கிறது.
காரில் அமர்ந்த பிறகு செல்லும் இடத்தை பதிவிட்டால் கார் தானாக இலக்கை நோக்கி பயணிக்க தொடங்குகிறது. உள்ளே இருக்கும் திரையில் கார் செல்லும் வழித்தடத்தை பயணிகள் கண்காணிக்க முடியும். பொழுது போக்கிற்காக காரினுள் பாடல்களை கேட்கவும், விரும்பும் விடியோக்களை பார்ப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ரோபோ டாக்ஸி சேவைக்காக நேவியஸின் மென்பொருள் மூலம் இயங்கும் மாடல் Y கார்களை டெஸ்லா களத்தில் இறக்கி உள்ளது. ஓட்டுநர் இல்லாவிடினும் ரிமோட் மூலம் கார்கள் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. தானியங்கி ரோபோ டாக்ஸிக்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் படிப்படியாக அமெரிக்கா முழுவதும் அறிமுகம் செய்ய டெஸ்லா திட்டமிட்டுள்ளது.