மதுரை: அதிமுக மாஜி அமைச்சரின் பண்ணை வீட்டில் கொள்ளை போனது ரூ.200 கோடியா, ரூ.42 லட்சமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் மாஜி அமைச்சரின் முன்னாள் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும், கொள்ளை போன பணத்தில் 70 சதவீதம் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மதுரையைச் சேர்ந்த பாஜ ஆதரவாளரான ரவிக்குமார் தனது சமூக வலைதளத்தில் கடந்த சில வாரத்திற்கு முன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், மதுரை மாநகர் பாஜ வழக்கறிஞர்களில் சிலர் கட்டப்பஞ்சாயத்து மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வது வாடிக்கையாக உள்ளது. மதுரை அதிமுக பிரமுகர் ஒருவரின் பல கோடி பணத்தை ரவுடிகளை வைத்து பறிந்து சென்றுள்ளனர் என கூறியுள்ளார். இந்த பதிவு மதுரையைச் சேர்ந்த அதிமுக மற்றும் பாஜவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில், மதுரையைச் சேர்ந்த அதிமுக மாஜி அமைச்சர் ஒருவர் தனது பண்ணை வீடு மற்றும் ஒரு அபார்ட்மென்டில், நகைகள், ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பல கோடி கருப்பு பணத்தை லாக்கரில் வைத்து பதுக்கியும் வைத்திருந்துள்ளார். இதை நோட்டமிட்ட ஒரு கும்பல் லாக்கரில் இருந்த சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்து சென்ற விவகாரம் ரவிக்குமாரின் சமூக வலைத்தள பதிவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த விவகாரம் குறித்து மாஜி அமைச்சர் அதிகாரப்பூர்வமாக போலீசில் புகார் அளிக்காத நிலையில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து குறிப்பிட்ட தொகையை கருப்பு பணமாக பினாமிகள் மற்றும் உறவினர்கள் பலர் மூலம் பதுக்கி வைத்திருந்ததும், மொத்தமாக கொள்ளை போனதும் தெரியவந்தது.
இதுகுறித்து மாஜி அமைச்சர் வெளிப்படையாக புகார் அளிக்காமல் ரகசியமாக விசாரிக்கும்படி கூறியதாகவும், அதன் அடிப்படையில் விசாரித்து கொள்ளை போன பணத்தில் 70 சதவீதத்தை மீட்டு ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை அதிமுக மாஜி அமைச்சருக்கு நெருக்கமானவர் என கூறப்பட்ட மதுரை விளாங்குடி, மீனாட்சி நகர் அபார்ட்மென்ட்டில் வசிக்கும் ஜெயேந்திரன் கதிர்வேல் என்பவர் தனது வீட்டில் இருந்த ரூ.42 லட்சம் கொள்ளை போனதாக கூடல் புதூர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், ‘‘சென்னை ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறேன். எனது சொந்த ஊரான போடியில் கோயில் திருவிழாவிற்காக கடந்த ஜூன் 17ம் தேதி குடும்பத்துடன் சென்றேன். 21ம் தேதி வீடு திரும்பினேன். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டினுள் சொத்துக்களை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.42 லட்சத்தை வைத்திருந்த பேக் மாயமாகி இருந்தது’’ என கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில், மதுரை கூடல்புதூர் போலீசார் விசாரித்து, இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சிவப்பு பிரகாஷ் (35), நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த விவேக் ஆனந்த் (34), பொதும்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (49) மற்றும் திருப்பாலையைச் சேர்ந்த யோகேஷ் (36) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். ரூ.200 கோடிக்கும் அதிகமாக கொள்ளை போனதாக கூறப்படும் நிலையில், மதுரையைச் சேர்ந்த மாஜி அதிமுக அமைச்சருக்கு நெருக்கமான ஜெயேந்திரன் கதிர்வேல், திடீரென தனது வீட்டில் ரூ.42 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறியதும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து உள்ளது. இந்த வழக்கில் கைதான பொதும்பு சுரேஷ், மாஜி அதிமுக அமைச்சர் வீட்டில் முன்பு டிரைவராக பணியாற்றியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.