பெரம்பூர்: வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (40). இவர் சென்னை மாநகராட்சி 58வது வார்டில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 5ம் தேதி வேலை முடிந்து வேப்பேரியிலிருந்து தனது பைக்கில் மூலக்கடை வழியாக வீட்டிற்கு சென்றபோது 3 பேர் தனசேகரை தாக்கி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து தனசேகர் கொடுத்த புகாரின் பேரில் கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஏற்கனவே தினேஷ்ராஜ் என்ற பாட்ஷா (24) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெரம்பூர் ஆறுமுகம் தெருவைச் சேர்ந்த சாயல் உசேன் (23), சங்கரேஸ்வரன் (22) ஆகிய இருவரையும் நேற்று முன் தினம் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.