குன்றத்தூர்: குன்றத்தூரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள், நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையால் அகற்றப்பட்டன. குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோயில் அருகே, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பொன்னியம்மன் கோயில் தெருவில் சமீப காலமாக அதிகளவில் சாலையை ஆக்கிரமித்து கடைகளின் ஷட்டர்கள், விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் தினமும் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக சாலையின் இரு புறங்களிலும் உள்ள கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, சாலை சுருங்கி இருந்ததால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவிகள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவின்பேரில், குன்றத்தூர் நகரமன்ற தலைவர் சத்தியமூர்த்தி, நகராட்சி ஆணையர் குமாரி, நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள், நேற்று பொக்லைன் இயந்திரம் கொண்டு சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளின் முன் பகுதிகளை முற்றிலும் இடித்து அகற்றினர்.
அப்போது மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும், குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு, சன்னதி தெரு, சின்ன தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அந்த பகுதிகளிலும் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. எனவே அதற்கு முன்பாக கடை உரிமையாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.