*சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை
ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் சேதமான சாலையையும் சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஷெட் பகுதியில் கட்டேரி கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
இந்த சாலையானது ரயில்வே தரைப் பாலத்தைக் கடந்து கட்டேரி கிராமத்திற்கு செல்லும் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் தார் சாலை அமைக்கப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே தண்டவாளப்பாதை விரிவாக்கத்தின் போது ரயில்வே துறை மூலம் சாலையின் அருகே பள்ளம் தோண்டப்பட்டு ரயில்வே பணிக்காக மண் பயன்படுத்தப்பட்டது.
இதனால் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலை குண்டும் குழியுமாக மாறி பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.மேலும் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் கொட்டப்படுவதால் மழை நீர் நிரம்பி குப்பை கழிவுகள் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தார் சாலை மன்சாலையாக மாறி உள்ளதை சீரமைத்து புதிய சாலை அமைக்கவும், குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.