கூடுவாஞ்சேரி: சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வட மற்றும் தென்மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள், விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், புறநகர் பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு 9 மணிக்குமேல் தென்மாவட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பயணிகள் கேட்டபோது முறையான பதில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று நள்ளிரவு ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி, ஜிஎஸ்டி சாலையின் இருபக்கத்திலும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. தகவலறிந்து கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி மற்றும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியிலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீசாருக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம் முற்றியது.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த சில நாட்களாக திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாமக்கல், கன்னியாகுமரி, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, தென்காசி, தேவகோட்டை உள்பட பல்வேறு தென்மாவட்ட பகுதிகளுக்கு இரவு 9 மணிக்கு மேல் போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. முன்பதிவு செய்தும், பஸ்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை.
இதனால் மணிக்கணக்கில் தூக்கம், பசியோடு குடும்பத்துடன் காத்திருக்க நேரிடுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். உடனடியாக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
அப்போது, இதுபற்றி சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீசார் உறுதியளித்தனர். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். ஜிஎஸ்டி சாலையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய சாலை மறியல் நடந்ததால் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றது. சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.