Saturday, March 2, 2024
Home » சாலை விரிவாக்கத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட தரிசு நிலங்களில் புளிய மரங்களை நட வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சாலை விரிவாக்கத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட தரிசு நிலங்களில் புளிய மரங்களை நட வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

by Mahaprabhu

வேலூர்: நாடு முழுவதும் சாலை விரிவாக்கப்பணியால் வெட்டி சாய்க்கப்பட்ட புளிய மரங்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுகட்ட தரிசு நிலங்களிலும், விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைகளிலும் புளிய மரக்கன்றுகளை நட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்தே பிரதான பங்கு வகிக்கிறது. நீர்வழி, நிலவழி, வான்வழி போக்குவரத்து என்ற மூன்றில் நிலவழி போக்குவரத்தில் ரயில் போக்குவரத்தை தவிர சாலை போக்குவரத்து பிரதான பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் 2,274 கி.மீ. தூரம் தேசிய நெடுஞ்சாலைகளிலும், 2,250 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளிலும், பல்லாயிரம் கி.மீ. தூரம் ஊரக சாலைகளிலும் புளியமரங்கள், ஆல், அரசன், வேம்பு, இலுப்பை, நாவல், பனை, புங்கன் மரங்கள் நிறைந்துள்ளன. இதுபோக வனப்பகுதிகள், கிராமப்புறங்களிலும் தோப்புகளாகவும், தனித்தனி மரங்களாகவும் புளிய மரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில ெநடுஞ்சாலைகள், கிராமப்புற, நகர்ப்புற சாலைகள் என மொத்தம் 50 லட்சம் புளிய மரங்கள் இருந்தன.

இதுபோக வனம், விவசாயம் மற்றும் பிற நிலங்களில் என மொத்தம் 20 லட்சம் மரங்கள் நிறைந்திருந்தன. நாடு முழுவதும் இவ்வாறு ஏறத்தாழ 10 கோடிக்கும் மேற்பட்ட புளியமரங்கள் மற்றும் இதர பயன்தரும் மரங்கள் சாலைகளின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பனை மரத்துக்கு அடுத்த இடத்தை புளிய மரம் பெற்றிருந்தது. தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 6 லட்சம் புளிய மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓச்சேரி தொடங்கி கிருஷ்ணகிரி வரை 40 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டன. இதில் 25 ஆயிரம் புளிய மரங்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் விழுப்புரம்-மங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேட்டவலம் தொடங்கி கணியம்பாடி வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டிருக்கலாம் என்றும், இதில் 25 சதவீதம் புளிய மரங்கள் என்றும் கணக்கிடப்படுகிறது. அதேபோல் ஆற்காடு-திண்டிவனம் சாலை, காஞ்சிபுரம்-செய்யாறு சாலைகளிலும் விரிவாக்கப்பணியின் போது நூற்றுக்கணக்கான புளிய மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் மட்டும் 900 ஹெக்டர் பரப்பளவு தேசிய நெடுஞ்சாலைகளில் புளிய மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் சராசரியாக 2.5 லட்சம் மெட்ரிக் டன் புளி மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பிற சாலை பணிகளின் போது இழக்கப்பட்ட இழப்புகள் தனியானது. அதேபோல் நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வருவாய் போனது. இதில் மிகத்துல்லியமான புள்ளி விவரம் என்பது கூற இயலாது. இந்த இழப்பில் மரம், பட்டை, இலை என புளிய மரம் தரும் ஏனைய பயன்கள் கணக்கில் தரப்படவில்லை என்கின்றனர் விவசாயத்துறை வல்லுனர்கள். அக்காலத்தில் சாலைகளின் இருபுறமும் ஆல், அரசன், வேம்பு, பனை, இலுப்பை, நாவல், புங்கன், புளிய மரங்கள் நடப்பட்டன. இவை அரசின் வருவாய்க்கு மட்டுமல்லாமல், நிழலுக்காகவும், வாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் ஏற்படும் இழப்பின் வீரியத்தை குறைக்கவும் பயன்பட்டன. அத்துடன், வாகனங்கள் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை தடுக்கவும் இந்த மரங்கள் பயன்பட்டன. இதற்காக சாலைகளில் அகற்றப்படும் ஒரு மரத்துக்கு ஈடாக 10 மரங்கள் நட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது.

எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மட்டும் இன்றி, இழந்துவிட்ட புளி மகசூலை திரும்ப பெறுவதற்காகவும், விபத்தின் வீரியத்தை குறைப்பதற்காகவும் மத்திய, மாநில நெடுஞ்சாலைத்துறைகள் மற்றும் கிராமப்புற சாலை விரிவாக்கப்பணிக்காக வெட்டி சாய்க்கப்பட்ட புளிய மரங்களுக்கு ஈடாக மலர் செடிகளையும், பிற மரங்களையும் வைப்பதைவிட புளிய மரக்கன்றுகளையே நட்டு பராமரிக்க முன்வர வேண்டும். அதேபோல் சாலை விரிவாக்கப்பணிகளால் வெட்டப்பட்ட புளிய மரங்களால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட தமிழகத்தில் தரிசாக உள்ள 1 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலங்களிலும், 4.25 லட்சம் சிறு, குறு விவசாயிகளால் தரிசாக வைக்கப்பட்டுள்ள 7 லட்சம் ஏக்கர் பட்டா நிலங்களிலும் புளிய மரக்கன்றுகளை நடுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசின் வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை மூலம் இழந்த புளியம் பழ மகசூலையும், அவற்றின் பிற பயன்பாட்டு பொருட்களின் இழப்பையும் ஈடுகட்ட முடியும் என்று சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்துறை வல்லுனர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi