* சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் அதிரடி நடவடிக்கை; புதுப்பொலிவு பெறும் மாநகர்
சென்னை: சென்னை தெருக்களில் போக்குவரத்திற்கு இடையூறாக, கேட்பாரற்று கிடந்த 2748 வாகனங்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையத் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால், பெரும்பாலான வாகனங்கள் சாலையிலும், தெருக்களிலும் நிறுத்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் பஸ்கள் தனியார் பஸ்கள், வேன்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன.
கால் டாக்சிகள், ஆட்டோக்கள் சாலைகளில் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உத்தரவிட்டார். எனவே, சென்னை மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, கேட்பாரற்ற வாகனங்களை பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் தெருக்களிலும், சாலைகளிலும் கைவிடப்பட்ட வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. மோட்டார் வாகன சட்டம் 380ன்படியும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 128ன்படியும் இந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 2748 வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், கேட்பாரற்றும் நிறுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் மீது வழக்குகள் உள்ளதா என காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். பின்னர் வாகனம் குறித்த தகவல்கள் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடும். அதிலிருந்து 30 நாட்களுக்குள் வாகனங்களை எடுத்துக்கொள்ள உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகும் உரிமை கோரப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சியால் ஏலம் விடப்படும். இந்நிலையில், செப்.1ம் தேதி முதல் சாலையில் கைவிடப்பட்ட 2748 வாகனங்களில் சென்னை காவல்துறை உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அதாவது மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் இரு கட்டங்களாக மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதில் சுமார் 1146 வாகனங்கள் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களின் உரிமையாளர்களிடம் தகவல் கொடுக்கப்பட்டது. இதில் சுமார் 760 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 842 வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மண்டலம் 10ல் மொத்தம் 336 வாகனங்கள் கேட்பாரற்று கிடந்ததாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறையில் வாகனங்களை எடுத்து செல்லும் வாகனங்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், கேட்பாரற்ற வாகனங்களை அகற்றும் பணி தாமதமாவதாக கூறப்படுகிறது. எனவே, மீதமுள்ள வாகனங்களை மாநகராட்சியுடன், சென்னை காவல்துறையும் இணைந்து வேகமாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘சாலையில், கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை, பருவ மழைக்கு முன்னரே முடிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இரவு நேரங்களில் ஆணையர், அதிகாரிகளுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் ஆய்வு மேற்கொள்கிறார். இதனால் நாங்களும், சுறுசுறுப்பாக பணியாற்றுகிறோம். மழைக் காலத்திற்கு முன்னரே, அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்படும். மேலும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலின்றி வாகன ஓட்டிகள் செல்லலாம். அதிகபட்சமாக மண்டலம் 4 முதல் 10 வரை அதிக வாகனங்கள் கேட்பாரற்று இருக்கிறது. ஏன் இந்த பகுதிகளில் வாகனங்கள் அதிகளவில் உள்ளது என்பது குறித்து அந்தந்த மண்டல அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ சென்னையில் 1146 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது’’ என்றார்.