சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக, ‘சிப்’ பொருத்திய க்யூஆர் கோடு மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் 22ம் தேதி (இன்று) முதல் 30ம் தேதி வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில், சுமார் 35,000க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பல்வேறுவிதமான வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் 20,000க்கும் அதிகமானோர் தள்ளுவண்டிகளில் சாலையோர உணவகங்களை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற கடைகளால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் பலர் அந்த சாலைகளை கடக்க மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி பகுதியில் சாலையோர கடைகள் அமைப்பதை முறைப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மாநகராட்சி முயற்சி எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறை படுத்துதல், சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனை குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை முழுவதும் 776 பகுதிகள் விற்பனை செய்யக்கூடிய மண்டலங்களாகவும், 491 பகுதிகள் விற்பனை செய்யக்கூடாத மண்டலங்களாகவும் அறிவிக்க சென்னை மாநகராட்சியின் நகர விற்பனை குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்தது.
இந்த சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஒன்றிய, மாநில அரசுகளின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் இவர்கள் பயன்பெறவும் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி நடைபெற்ற நகர விற்பனை குழுவின் 8வது கூட்டம் நடந்தது. இதில், விற்பனையாளர்களின் பிரதிநிதிகள் பங்கேற்று புதிய விற்பனை மற்றும் விற்பனை இல்லாத மண்டலங்களின் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தனர்.
இந்த பட்டியல் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியின் நகர விற்பனைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 39 சாலைகளில் உள்ள விற்பனை மண்டலங்களின் முதல் பட்டியலின் அரசிதழ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், போக்குவரத்தை ஆய்வு செய்து, போக்குவரத்து போலீசார் எழுப்பிய ஆட்சேபனைகளின் அடிப்படையில், விற்பனை நடவடிக்கையை பதிவு செய்த 63 சாலைகள், விற்பனை தடை மற்றும் வாகன நிறுத்துமிடங்களாக அறிவிக்கப்பட உள்ளது.
எழும்பூரில் உள்ள வார்டு 61ல் உள்ள எத்திராஜ் சாலை மற்றும் வார்டு 73ல் உள்ள டெமெல்லோஸ் சாலை போன்ற முக்கிய பகுதிகள் விற்பனை மண்டலங்களாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, அந்த இடங்களில், விற்பனையாளர்களுக்கான இடங்களை மாநகராட்சி ஒதுக்கும். இந்த பணிகள் முடிவடைந்ததும், அங்கு கடை நடத்த உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட விற்பனை வண்டிகளை வழங்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நகர விற்பனை குழுவின் 8வது கூட்டத்தில், மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக சிப் பொருத்திய க்யூஆர் கோடு மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்குவதற்காக 22ம் தேதி (இன்று) முதல் வரும் 30ம் தேதி வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
மேற்கண்ட சிறப்பு முகாம்களில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் கைபேசியினை கொண்டு வர வேண்டும். கைபேசி எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பப்படும். அந்த செல்போன் எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பழைய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
* ஆக்கிரமிப்பு தடுக்கப்படும்
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தி, வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அவர்களை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, விற்பனை மண்டலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. எந்தெந்த பகுதிகளில் விற்பனை செய்ய அனுமதிக்கலாம்.
எந்தெந்த பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சியின் நகர விற்பனை குழு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்கட்டமாக இ்நத குழுவின் பரிந்துரையின் படி, 39 சாலைகளில் உள்ள விற்பனை மண்டலங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதே போன்று 63 சாலைகள் விற்பனை தடை மற்றும் வாகன நிறுத்துமிடங்களாக மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.
* பார்க்கிங் பகுதிகள்
சென்னையில் எந்தெந்த பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களாக பரிந்துரைக்கலாம் என்று போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர். அதன் அடிப்படையில், பூந்தமல்லி நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் வார்டு 144, 145, மற்றும் 147, வார்டு 149ல் ஆற்காடு சாலை, வார்டு 150ல் தாம்பரம்-புழல் பைபாஸ் சாலை, வார்டு 151ல் பூந்தமல்லி நெடுஞ்சாலை, வார்டு 153ல் குன்றத்தூர் சாலை ஆகிய இடங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.