பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கிராமத்தில் பழுதான ரோடுகளை சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளர். பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி கிராமத்தில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில், வால்பாறை ரோட்டிலிருந்து மாக்கினாம்பட்டி வழியாக, சந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிக்கு செல்லும் ரோடு மற்றும் மாக்கினாம்பட்டியிலிருந்து கஞ்சம்பட்டி, தொழில்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரோடானது பல ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. அதன்பின் சீரமைப்பு பணி நடக்காததால் நாள்போக்கில் பெரிய அளவில் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டது.
சில நேரத்தில் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கையின் அடிப்படையில் அந்த ரோட்டில் அவ்வப்போது பேட்ஜ் ஒர்க் என்ற பெயரில் மண்ணை போட்டு நிரப்பி விடுகின்றனர். ஆனால், மழைக்காலங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் குண்டும் குழியுமாக உண்டாகிறது.
இந்த பகுதியில் பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த ரோட்டை முழுமையாக சீர்படுத்தாமல் இருப்பதால், அடிக்கடி இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது. மிகவும் பழுதான ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், மாக்கினாம்பட்டி கிராமத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பழுது ஏற்பட்டு குண்டும், குழியுமாக உள்ள ரோட்டை முறையாக சீரமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் இல்லாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் இந்த கிராமத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பழுதான ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.