அறந்தாங்கி: கிராமத்திற்கு சாலை வசதி, புதிய பேருந்து வழித்தடம் கேட்டு பள்ளி மாணவன் அமைச்சர், கலெக்டருக்கு போனில் கோரிக்கை வைத்த நிலையில் முதல்வர் உத்தரவின்பேரில் உடனடியாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு அக்கிராம மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பன்னியூர் கிராமத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நீண்ட நாட்களாக முறையான சாலை வசதியும், போக்குவரத்திற்கு உரிய பேருந்து வசதியும் இன்றி அப்பகுதி மக்கள் தவித்து வந்துள்ளனர்.
இதனால் பகுதிக்கு சாலை வசதி மற்றும் பேருந்து வசதி கேட்டு அதே பகுதியில் வசித்து வரும் 9ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் ஸ்ரீநாத் (14), மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் தொலைபேசியில் பேசினான். மாணவனின் கோரிக்கையை தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளி மாணவனின் கோரிக்கையை உடனை நிறைவேற்ற புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தற்போது பன்னியூர் கிராமத்திற்கு புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் வழியாக பன்னியூர் கிராமத்திற்கு புதிய பேருந்து வழித்தடமும் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நடந்தது. விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கொடியசைத்து புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், புதிய வழித்தட பேருந்தில் பன்னியூர் கிராமம் வரை அமைச்சர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் அருணா பயணம் செய்தார். 9ம் வகுப்பு மாணவனின் கோரிக்கையை ஏற்று புதிய தார்ச்சாலை மற்றும் புதிய பேருந்து வழித்தடம் அமைத்து கொடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கும், போக்குவரத்து துறை அமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.