பூந்தமல்லி: சென்னை கே.கே.நகர் நெசப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 3 மாடிகளை கொண்ட இந்த பள்ளி கட்டிடம், கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தபோது, பள்ளி கட்டிடத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டும், மேற்கூரை கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்தும் காணப்பட்டது. இதனால், மாணவர்கள் அச்சமடைந்து வகுப்டறையை விட்டு வெளியேறினர். தகவலறிந்து பள்ளி முன் பெற்றோர்களும் குவிந்தனர்.
அப்போது, மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் பள்ளியின் முன் சாலையில் அமர்ந்து, உடனடியாக பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து மாணவ, மாணவிகள், பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளி கட்டிடம் விரைவில் சீரமைக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தையொட்டி மாநகராட்சி பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘‘பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளதால், மழைக்காலத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாக உள்ளது. தற்போது பள்ளி கட்டிட தூண்களில் விரிசல் உள்ளதால் மாணவ மாணவிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளியை சீரமைக்க வேண்டும்,’’ என்றனர்.