செங்கல்பட்டு: விபத்தின்போது டயரில் சிக்காமல் பாதுகாக்க அரசு பேருந்துகளில் டயர்களுக்கு இடையே அமைக்கப்பட்டிருக்கும் ரப்பர் தடுப்புகள் பழுதடைந்துள்ளன. இதனால், ரப்பர் தடுப்புகளை தாங்கி பிடிக்கும் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டுள்ளதால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தடுப்புகளால் எந்த பயனும் இல்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து வருபவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்து நடக்கிறது.
அதேபோல, பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.அப்போது, அந்த சமயத்தில் விபத்துக்குள்ளாகும் நபர்கள் பேருந்தின் டயரில் சிக்காமல் தடுக்கும் விதமாக பேருந்தின் இருபுறமும் முன் மற்றும் பின் பக்க டயர்களுக்கும் இடையே இரும்பு கம்பிகளின் மீது ரப்பர் தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.ஆனால், அந்த தடுப்புகள் இரும்பு கம்பிக்கு வெளியில் நீட்டி கொண்டிருப்பதால், விபத்தில் சிக்கியவர் மீது கம்பி குத்தி மரணமடையும் நிலை உள்ளது என பயணிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பு குற்றம்சாட்டுகின்றனர்.