மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (46). இவர், குடும்பத்தினருடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் இல்லத்திற்கு வந்து விட்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் கோத்தகிரிக்கு காரில் சென்றுள்ளார். பவானிசாகர் அணை வியூ பாயிண்ட் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதேவேளையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து திருப்பூர் செல்வதற்காக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காரில் வந்து கொண்டிருந்தார். விபத்தில் கார் சிக்கியதை பார்த்து தனது காரை விட்டு இறங்கிய அமைச்சர் சாமிநாதன் உடனடியாக காயமடைந்தவர்களை பத்திரமாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அனைவருக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதால், சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.


