வருசநாடு : வருசநாட்டில் இருந்து வாலிப்பாறை வரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட சில பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வருவதாக கூறி தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு வருசநாடு வனத்துறையினர் தடை விதித்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வனத்துறையினருடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தார்சாலை அமைக்க அனுமதி கிடைக்கவில்லை.
எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. இந்த பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது வரையும் மீதமுள்ள பகுதிகளில் தார்ச்சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை.இதனால் அந்த பகுதியில் மட்டும் அதிக அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக சாலை காணப்படுகிறது. எனவே பைக், ஆட்டோ உள்ளிட்ட விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக தார்ச்சாலை அமைக்கப்படாத பகுதிகள் அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக வருசநாடு முதல் முருக்கோடை வரையிலான சுமார் கிலோமீட்டர் 2 தொலைவிலான பகுதி முற்றிலுமாக சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது. எனவே தொடர்ந்து பைக் உள்ளிட்ட வாகன விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள பகுதிகளில் தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.