*மாவட்டம் முழுவதும் நடத்த முடிவு
திருப்பூர் : திருப்பூர் அருகே இன்ஸடாகிராம் ரீல்ஸ் தொடர்பான பிரச்னையில் சாலையில் குடுமிபிடி சண்டையிட்ட மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்களை வரவழைத்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செல்போன் பயன்பாடு குறித்து விரைவில் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.
நண்பர்களுக்குள் தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்களால் சமூக சீரழிவு ஏற்படும் நிலையில் இதற்கான கட்டுப்பாடுகள் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக செல்போன்கள் கையில் 6ம் விரலாக ஒட்டிக்கொண்டது. ஆண்ட்ராய்டு வகையான செல்போன்கள் பெருமளவு பயன்பாட்டில் இருந்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லோரிடத்திலும் இணையதளம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக சமீப காலங்களில் சமூக வலைதள பக்கங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளிட்டவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விரல் நுனியில் உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் நடக்கும் சம்பவங்களை தெரிந்து கொள்ளக்கூடிய தகவல் பகிர்வதற்காக பெருமளவு இதை பயன்படுத்த துவங்கி நாளடைவில் பொழுதுபோக்கிற்காக மாற்றப்பட்டது. ஆனால் இவை சமூகத்தில் பெரும் சீரழிவு ஏற்படுத்தக்கூடிய வகையில் உருமாற்றம் பெற்றுள்ளன.
இதன் பயன்பாடுகளை கட்டுப்படுத்தவும், உபயோகமான முறையில் மட்டும் பயன்படுத்த வேண்டிய தேவையையும் பயனாளர்களுக்கு உணர்த்த வேண்டியுள்ளது. கொரோனா காலகட்டத்தின்போது பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஸ்மார்ட் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக தொடங்கப்பட்டது. இதற்காக பள்ளி மாணவ, மாணவிகளும் செல்போன்களை அதிகளவு பயன்படுத்த தொடங்கினர்.
பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றாலும்கூட மாணவ, மாணவிகளிடமிருந்து செல்போன் பயன்பாட்டை குறைக்க முடியவில்லை. இதன் காரணமாக செல்போன் பயன்பாடு என்பது மாணவர்கள் மத்தியில் பெருகிப்போனது. நண்பர்களுடன் தகவல் பகிர்வு, கல்வி தொடர்பான பகிர்தல், கல்வி தொடர்பான தேடுதல் உள்ளிட்டவற்றிற்காக பயன்படுத்த ஆசிரியர்களால் அறிவுறுத்தப்பட்டாலும் அதற்கு மேலான தேவையற்ற வகையிலும் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குழுக்களை தொடங்கி தேவையற்ற பதிவுகளை பகிர்தல், இதன் மூலம் விரோதத்தை உண்டாக்கி வருகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடு, திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையம் பகுதியில் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் இரு குழுக்களாக மோதிக்கொண்டனர்.
இந்த மோதலின் பின்னணியில் இரு பள்ளி மாணவிகளுக்கும் உள்ள இன்ஸ்டாகிராம் குழுக்களில் பதிவுகளை பதிவிட்டதில் துவங்கிய மோதல், சாலையில் குடுமிபிடி சண்டையிட்டு கொள்ளும் வகையில் முடிந்துள்ளது. இவை சமூக வலைதளங்களில் மிகப்பெரும் அளவில் பகிரப்பட்டு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து மாணவர்களின் செல்போன் பயன்பாடு கண்காணிக்கப்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் இதற்கு முழு பொறுப்பேற்று மாணவ, மாணவிகள் செல்போன்களை பயனுள்ள தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனரா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்கின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் கணபதிபாளையம் பகுதியில் கடந்த 24ம் தேதி இரு அரசு பள்ளி மாணவிகள் குழுக்களாக மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பாக இரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டு நேற்றைய தினம் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் நேரில் வரவழைக்கப்பட்டு ஆசிரியர்களால் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலரும் இரு பள்ளிகளுக்கும் நேரில் சென்று ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது. இரு பள்ளிகள் மட்டுமல்லாது மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் செல்போன் பயன்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் கவுன்சிலிங் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக திருப்பூர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘மாணவர்களின் செல்போன் பயன்பாடு என்பது தற்போது இன்றியமையாததாக உள்ளது. பள்ளியில் நடத்தப்படுகின்ற பாடங்கள்கூட ஒரு சில வேலைகளில் மாணவர்களை கொண்ட வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்புகின்றோம். அவை அவசியமானதாககூட உள்ளது. கல்வி தேவைக்கு மட்டுமல்லாத இன்ன பிற தேவைகளுக்கும் செல்போன் பயன்பாடு என்பது ஆசிரியர்களால் ஊக்குவிக்கப்படுவதில்லை.
பள்ளிகளில் செல்போன் பயன்பாடு மற்றும் செல்போன் கொண்டு வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளில் செல்போன் பயன்படுத்தும் மாணவர்கள் அதனை கல்வி தேவைக்கு மட்டுமல்லாது இன்ன பிற தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். இதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பெற்றோர்கள் உடனடியாக பிள்ளைகளின் செல்போன் பயன்பாட்டை நிறுத்தும் பட்சத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டிற்கு நேர வரம்பு நிர்ணயிக்கலாம். செல்போன் பயன்பாட்டில் இருந்து தங்கள் குழந்தைகளை திசை திருப்ப மாற்று வழிகளில் யோகா, தியானம், விளையாட்டு உள்ளிட்ட பயிற்சிகளுக்கு ஊக்கப்படுத்தலாம். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு இது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என தெரிவித்தார்.