பேராவூரணி : பேராவூரணி அருகே சாலையில் நடந்து சென்ற பெண் போலீஸ் ஒருவர் பைக் மோதி பலியானார்.அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா பெரியநாயகிபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகள் சுபபிரியா(23). பெண் காவலரான இவர் தஞ்சை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.இவர் நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் அருகே கண்ணமுடையார் கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
இந்த பணி முடிந்தவுடன் தாங்கள் தங்கியுள்ள திருமண மண்டபத்துக்கு சக போலீசாருடன் ரெட்டவயல் சாலையில் சுபபிரியா நடந்து சென்றார். அப்போது ரெட்டவயலை சேர்ந்த தண்டாயுதபாணி(42) ஓட்டி வந்த பைக், எதிர்பாராதவிதமாக சுபபிரியா மீது மோதியது. இதில் தலையில் காயமடைந்த சுபபிரியாவை சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்ைச பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.