*மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை ஆணையருமான அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட நம்பியார் நகரில் உள்ள சிறிய மீன்பிடி துறைமுகம் மேம்படுத்துவது குறித்தும், அக்கரைப்பேட்டை கிராமத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவ பிரிவில் அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பால் போன்றவைகளையும் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பிடம் தூய்மைப்பணிகள், மேலகோட்டைவாசல் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள், கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட கீழவீதியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து கீழ்வேளுர் வட்டம் தேவூர் கிராமம் பாரதியார் வீதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெறுவதையும், சாட்டியக்குடி கிராமத்தில் உள்ள சி பிரிவு பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ள பணிகளையும், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருக்குவளை ஊராட்சியில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர் தொழிற்நுட்ப ஆய்வக கூடத்தினையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, திருக்குவளை சமுதாயக்கூடத்தில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கும் பணிகளையும், தூய்மை பணியாளர்களுக்கு திடக்கழிவு பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்கள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
மேலும், தலைஞாயிறு ஒன்றிய பகுதியில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தினையும், குறுவை நெல் சாகுபடி பணிகள் மற்றும் பயிரிடப்பட்ட வயலையும், தலைஞாயிறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், தலைஞாயிறு பகுதியில் வருவாய் துறை சார்பில் பட்டா வழங்குவதற்கான ஆய்வு பணிகள்,
வேட்டைக்காரணிருப்பு ஊராட்சியில் முதல்வரின் சிற்றுந்து புதிய விரிவாக்க திட்டத்தின் கீழ் பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தின்படி, வேளாங்கண்ணி ஆர்ச் முதல் வேளாங்கண்ணி பேருந்து நிலையம், ரயில் நிலையம்,
செருதூர், காமேஸ்வரம் கிராமங்கள் வழியாக வேட்டைக்காரணிருப்பு வரை செல்லும் மினி பேருந்து சேவை நேர இயக்கம், பயண சீட்டு தொகை விவரத்தினையும், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலை போன்றவைகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கு பின்னர், நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆகாஷ், டிஆர்ஓ பவணந்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா, திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் லீனா சைமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.