சென்னை: பதவிக்காலம் முடிந்த பிறகும் எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநராக ஆர்.என்.ரவி நீடிக்கிறார் என்று மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, தமிழக ஆளுநர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சில கேள்விகளை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்று ஐந்தாண்டுகள் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து, தமிழக ஆளுநரின் பதவி காலத்தை நீட்டித்தோ அல்லது ஆளுநர் நியமிக்கப்படும்வரை அவரே ஆளுநராக நீடிப்பார் என்றோ குடியரசு தலைவர் இதுவரை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை பதவியில் தொடர குடியரசு தலைவர் ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளாரா?, இல்லாவிட்டால், பதவிக்காலம் முடிவடையும் காலத்திற்கு பிறகு நீங்கள் எந்த தகுதியின் கீழ் ஆளுநர் பதவியில் தொடர்கிறீர்கள். நீங்கள் ஆளுநராக இருந்து விலகிய பிறகும் நீங்கள் ஆளுநர் பதவியில் நீடிப்பது சட்டவிரோதம் இல்லையா, அப்படியானால் நீங்கள் எப்போது ராஜ்பவன் வளாகத்தை காலி செய்வீர்கள்? இவ்வாறு கேட்கப்பட்டுள்ளது.