ரிதன்யா தற்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்க அவரின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரிதன்யாவின் மாமியாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் வலிவுறுத்தப்பட்டுள்ளது. கணவரும், மாமனாரும் ஜாமின் கோரி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த சனிக்கிழமை வரதட்சணை கொடுமை காரணமாக ரிதன்யா என்கிற இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். 300 சவரன் நகைகள் மற்றும் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் வரதட்சனை கொடுத்தும், மேலும் 200 சவரன் நகை வேண்டும் என கணவர் குடும்பத்தினர் ரிதன்யாவை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின் குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கவின் குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கக்கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. ரிதன்யாவின் பெற்றோர் குடும்பத்தினர் தரப்பில் இந்த மனுவின் மீது இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கவின் குமாருக்கும், ஈஸ்வர மூர்த்திக்கும் ஜாமின் வழங்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
அப்போது வாதாடிய ரிதன்யா தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே அவர்கள் ஜாமீன் கோரியுள்ளதாகவும், அவர்களுக்கு ஜாமீன் வழங்க ரிதன்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார். இந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெற உள்ளதாகவும், இதனை தற்கொலை வழக்காக மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கை மாற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், மாற்றப்பட்ட எஃப்.ஐ.ஆரில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் செல்போனில் உள்ள வாக்குமூலம் குறித்து பதிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், காவல்துறை வழக்கு விசாரணையை மட்டுப்படுத்துவதாக பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்படுவதாகவும், வழக்கின் மூன்றாவது குற்றவாளியான கவின் குமாரின் தாயார் போலீசாரால் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் மட்டுமே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் இடைக்கால மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆர்டிஓ விசாரணை நடந்து வருவதால் அந்த விசாரணையின் முடிவிலேயே முழுமையான தகவல்கள் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், வழக்கை சிபிசிஐடி மாற்ற கோரி ரிதன்யாவின் பெற்றோர் தரப்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.