திருப்பூர்: ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியார் சித்ராதேவியை போலீஸ் கைது செய்தது.
திருப்பூரைச் சேர்ந்த (27) வயது பட்டதாரி பெண் ரிதன்யா, வரதட்சணை கொடுமையால் திருமணமான 77 நாட்களில் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.ரிதன்யாவின் கணவர் கவின்குமார் குடும்பத்தினரின் கொடுமைதான் இதற்கு காரணமென்று பெண்ணின் பெற்றோர் தந்த புகாரில் சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின்குமார், ஈஸ்வர மூர்த்தியை கைது செய்தனர்.
இதையடுத்து மாமியார் சித்ராதேவி உடல் நலக்குறைவு காரணமாக பைண்டிங் ஆர்டர் முறையில் விடுவிக்கப்பட்டிருந்தார். கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி இருவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்கு மாறு திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் பைண்டிங் ஆர்டர் முறையில் இருந்த அவரது மாமியார் சித்ரா தேவியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சேயூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ரிதன்யாவின் பெற்றோர், உறவினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து சித்ரா தேவியை போலீசார் கைது செய்தனர்.