புழல்: செங்குன்றம் அருகே உள்ள பகுதிகளில் குப்பை கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்குன்றம் ஜிஎன்டி சாலை மேம்பாலம் மற்றும் புழல் ஏரி மதகு அருகே ஏராளமான குப்பை கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு சிதறி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் இதன் அருகே புழல் ஏரி உள்ளதால், இந்த குப்பைகளை கிளறி விடும் பறவைகள் இந்த கழிவு பொருட்களை ஏரியில் போட்டுவிட்டு செல்கின்றன.
இதனால் குடிநீரும் மாசுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் செங்குன்றம் அருகே உள்ள தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சி அலுவலகம் அருகே குப்பைகள் சிதறிக் கிடக்கிறது. எனவே மழைக்காலங்களில் இந்த குப்பைகளுடன் மழைநீர் தேங்கி கழிவு நீராக மாறும் சூழ்நிலை உள்ளது. எனவே கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற மர்ம காய்ச்சல் உருவாக வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட சுகாதார துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து ஆங்காங்கே உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றி நோய் வராமல் தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.