திருமலை: ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் மலையை குடைந்து ரூ500 கோடியில் கட்டிய அரண்மனையை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு செய்தார். ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் விசாகப்பட்டினம் நகரில் உள்ள ரிஷிகொண்டா மலையை குடைந்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் இருப்பதற்கான முதல்வர் முகாம் அலுவலகம் அமைக்க ரூ.500 கோடியில் அரண்மனையை போன்று பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட்டது.
ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முதல்முறையாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஜனநாயக நாட்டில் ரிஷிகொண்டா போன்ற கட்டிடங்கள் கட்டப்படுவது ஆச்சரியமாக உள்ளது. கனவில் கூட இதுபோன்ற கட்டிடங்களை கற்பனை செய்வது தேவையற்றது.
ரகசியமாக மலையை குடைந்து இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. இன்று நேரிடையாக வந்து பார்த்த பின்னர் இந்தக் கட்டிடத்தை என்ன செய்வது என்று புரியவில்லை. ஜெகன் போன்றவர்கள் அரசியல் அமைப்பில் இருக்க கூடாதவர்கள். ஒரு முதல்வரின் ஆடம்பரத்திற்காக சுற்றுச்சூழலை அழித்து கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. முன்பு சந்திரகிரி அரண்மனை, விஜயநகரம் அரண்மனை, மைசூர் அரண்மனை, நிஜாம் அரண்மனையைப் பார்த்தோம்.
இத்தகைய அரண்மனைகள் வரலாற்றில் நிலைத்திருக்கின்றன. ஆனால் இப்போது ஜெகன் கட்டிய அரண்மனையை பார்த்தால் தலை சுற்றும். பொதுமக்கள் பணத்தில் இப்படி ஒரு அரண்மனையை ஜெகன்மோகன் கட்டி உள்ளார். ஜெகனின் மனநிலை யாருக்கும் புரியவில்லை. 13,540 சதுர அடியில் கட்டப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் உள்ள ரிஷிகொண்டா மலை ப்ளூ பாக் பீச் (நீல கடற்கரை) கொண்ட விசாகப்பட்டினத்தின் அழகான பகுதியாகும். இங்கு கஜபதி பிளாக்கில் அலுவலக வளாகம் ஆடம்பரத்துடன் கட்டப்பட்டுள்ளது. கலிங்கத் பிளாக்கில் 300 பேர் அமரும் மாநாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள காரிடாரைப் பார்த்தால் வெள்ளை மாளிகை போன்று இல்லை. அரசியல்வாதியான ஜெகன் இப்படிப்பட்ட தவறான செயல்களைச் செய்வார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.