சென்னை: ‘மணிப்பூரில் கலவரம் முடிவுக்கு வரவில்லை. மக்கள் இன்றும் அச்சத்துடனயே வாழ்கின்றனர்’ என்று மணிப்பூரைச் சேர்ந்த விளையாட்டு பயிற்சியாளர் ஹரிபியாரி தெரிவித்தார். சென்னையில் பயிற்சி பெறும் வாள்வீச்சு அணியின் பயிற்சியாளரான ஹரிபியாரி தேவி நேற்று கூறியதாவது: மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக கடந்த 3 மாதங்களாக எந்த விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பயிற்சி பெற முடியவில்லை. எனவே அடுத்து நடைபெற உள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதல்வர் அழைத்ததும், சென்னை வந்து விட்டோம். இங்கு எங்களுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சிக்கு வந்துச் செல்ல வாகன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. குறிப்பாக மணிப்பூர் உணவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழ்நாடு உணவும் நன்றாக இருக்கிறது. அதற்காக தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சரும் கனிவாக பேசுகிறார். மணிப்பூரில் இன்றும் இயல்பு நிலை திரும்பவில்லை. பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் யாரும் வகுப்புகளுக்கு செல்வதில்லை. அதேபோல் வேலைகளுக்கு செல்லவும் மக்கள் பயப்படுகின்றனர். இப்படி மக்கள் வெளியே வரவே அச்சப்படும் சூழல் தொடர்கிறது. அதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அந்த நிலைமை விரைவில் மாற வேண்டும் என்று எல்லோரும் வேண்டிக் கொள்ளுங்கள். மணிப்பூரில் இன்றும் இயல்பு நிலை திரும்பவில்லை. பெயருக்குத்தான் பள்ளி, கல்லூரிகள் திறந்திருக்கின்றன.