நெல்லை: தமிழகத்தில் கலவரம் செய்தால்தான் பாஜ காலூன்ற முடியும் என இந்து மக்கள் கட்சி நிர்வாகி செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பாளை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். நெல்லையைச் சேர்ந்த பாஜ கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வனுடன், நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாநில துணை தலைவர் உடையார் (48) நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவு பற்றி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதில் உடையார் பேசும்போது, கலவரம் செய்தால்தான் தமிழ்நாட்டில் பாஜ காலூன்ற முடியும் என கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து பாளையங்கோட்டை எஸ்ஐ துரைப்பாண்டியன், இன்ஸ்பெக்டர் முத்துகணேசிடம் அளித்த புகாரில், பொதுமக்களிடையே கலவரத்தை தூண்டி விடுவதால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதன் அடிப்படையில் போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு மண்டலம்) ஆதர்ஷ் பச்சேரா, பாளை சரக போலீஸ் உதவி கமிஷனர் பிரவீன், பாளை இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி, இந்து மக்கள் கட்சி மாநில துணை தலைவர் உடையார் மீது தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பது, அவதூறாக பேசியது, மிரட்டல் விடுப்பது உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை நேற்றிரவு கைது செய்து, பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், உடையாரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி, இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் உத்தரவிட்டுள்ளார்.