காஞ்சிபுரம்: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்ல உரிமை உண்டு என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக ஆட்சி பொறுப்பேற்றபோது ரூ.414 ஆக இருந்த சிலிண்டர் விலையை தற்போது ரூ.1400 ஆக உயர்த்திவிட்டு ரூ.200 குறைப்பு என கூறுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இன்னமும் கேஸ் விலை குறைக்கப்படவேண்டும். நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை தனியார்மயமாக்கி விட்டு ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர். இது எந்த வகையிலும் நியாயமில்லாத செயல். காலாவதியான சுங்கச்சாவடி இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் சாமானிய மக்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர் என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி கூறியதை பொறுத்தமட்டில், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்ல உரிமை உண்டு.
அதற்கு பதிலளிக்கலாம், ஆனால் கடுமையான விமர்சனங்களை கொண்டு சகோதரத்துவத்தை குலைக்கும் வகையில் மிரட்டல்விடுக்கக்கூடாது. வணிகர் சங்க பேரவை நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் ஆய்வுசெய்து மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இவ்வாறு விக்கிரம ராஜா கூறியுள்ளார்.