Sunday, September 8, 2024
Home » உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் பாஜவுடன் ரகசிய உறவுக்கு அவசியமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் பாஜவுடன் ரகசிய உறவுக்கு அவசியமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

by Arun Kumar

சென்னை: பாஜவுடன் ரகசிய உறவுக்கு அவசியமில்லை. பழனிசாமி மாதிரி ஊர்ந்து சென்று, பதுங்கி சென்று பதவி வாங்குகின்ற பழக்கம் திமுகவுக்கு கிடையாது. எல்லோருக்கும் உரிய மரியாதையை நாங்கள் கொடுப்போம். நமக்கென்று இருக்கக்கூடிய உரிமையை ஒருநாளும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில மீனவர் அணி துணை தலைவருமான கே.பி.சங்கரின் மகன் திலீபன்- ராயபுரம் ஜீவரத்தினம் விஜயகுமார் மகள் விஷாலி திருமணம் சென்னையில் நேற்று நடந்தது. விழாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த ஓராண்டு காலமாக கலைஞரின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பிலும், கட்சியின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கலைஞருடைய நூற்றாண்டு விழாவை தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். இந்தியாவில் இப்படிப்பட்ட விழாக்கள் எந்த தலைவருக்கும் நடந்தது கிடையாது. இவ்வளவு சிறப்பான விழாக்கள் நடத்தி இருக்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, கலைஞர் பெயரால் கிண்டியில் உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் பிரமாண்டமான நூலகம், கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட பேருந்து முனையம் போன்ற எத்தனையோ பயனுள்ள அமைப்புகளை ஏற்படுத்தி இருக்கிறோம். உதயநிதி சொன்னதுபோல, 1 கோடியே 15 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறக்கூடிய அளவிற்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் அதுவும் கலைஞர் பெயரில்தான் அமைந்திருக்கிறது.

இதற்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல், நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) நடந்த நிகழ்ச்சி, நாணயம் வெளியீடு விழா. நாணயம் அறிவாலயத்திற்கு வந்து விட்டது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சென்று 100 ரூபாய் நாணயத்தை உரிய தொகையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞருடைய நினைவிடத்தை போய் பார்க்கவேண்டும் என்று நாங்கள்கூட கேட்கவில்லை, பார்த்தே தீர வேண்டும் என்று அவரே கேட்டு, முழுமையாக அத்தனையும் பார்த்துவிட்டு இது மாதிரி எங்கேயும் பார்த்ததில்லை என்று பாராட்டி விட்டுச் சென்றார். அதற்கு பிறகு நிகழ்ச்சிக்கு வந்தார். வந்தவுடனே ஒரு பெரிய அதிர்ச்சியை எங்களுக்கெல்லாம் கொடுத்தார். இந்த அரங்கத்தில் இருக்கக் கூடிய அத்தனை பேரும் எழுந்து நின்று கலைஞருக்கு மரியாதை செலுத்துங்கள் என்று சொன்ன அந்த காட்சியை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை. நேற்று (நேற்று முன்தினம்) இரவு முழுவதும் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் நேற்றைய உரை உள்ளபடியே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் பேசினால் எப்படி பேசுவார்களோ அதைவிட அதிகமாக, திமுகவினர் பேசுவதைவிட அதிகமாக, சிறப்பாக கலைஞரை பற்றி அவர் பேசியது உள்ளபடியே வரலாற்றில் பொறிக்கத்தக்க உரையாக அந்த உரை அமைந்தது. கலைஞரை இந்தளவிற்கு புகழ வேண்டும், பாராட்டிப் பேச வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. அவருக்கு தேவையும் இல்லை. ஆனாலும் பேசினார் என்றால், உள்ளத்தில் இருந்து உண்மையை பேசினார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.இதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்றொருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் நேற்று பேட்டி கொடுக்கிறார்.

என்னவென்றால், நாணயம் வெளியிடுகிறார்கள். இந்தியில் இருக்கிறது. தமிழில் இல்லை. தமிழ், தமிழ் என்று முழங்குகிறார்களே, இந்தியில் இருக்கிறது என்று சொல்கிறார். முதலில் அரசியல் தெரிந்திருக்க வேண்டும். நாட்டின் நடப்பு புரிந்திருக்க வேண்டும். அந்த நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என்றால், ஒன்றிய அரசு அனுமதி கொடுத்து ஒன்றிய அரசின் மூலமாக நடைபெறக்கூடிய நிகழ்ச்சி. ஏற்கனவே, பலபேருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. மறைந்த எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதைபோல அண்ணாவுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த நாணயத்தை எல்லாம் ஒருவேளை பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அதை எடுத்துப் பாருங்கள். அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடுகிறபோது ஒன்றிய அரசு இந்தியில்தான் எழுதி, அதன்பிறகு ஆங்கிலத்தில் எழுத்துகள் அமைந்திருக்கும்.

ஆனால், அண்ணாவுக்கு நாணயத்தை வெளியிடுகிறபோது கலைஞர் என்ன செய்தார் என்றால், யாரும் செய்யாத ஒரு அதிசயத்தை செய்தார். அண்ணாவின் தமிழ் கையெழுத்து அதில் இடம்பெறச் செய்யவேண்டும் என்று சொல்லி, அண்ணாவின் தமிழ் கையெழுத்து நாணயத்தில் பொறிக்கப்பட்டு அதற்கு பிறகுதான் அது வெளியிடப்பட்டது. அதுபோலதான், கலைஞருடைய நாணயத்தை வெளியிடுகின்றபோது கலைஞருக்கு மிகவும் பிடித்த ‘தமிழ் வெல்லும்’, பெரும்பாலும் அவர் தமிழில் கையெழுத்து இடுகிறபோது பெரும்பாலும், ‘தமிழ் வெல்லும், தமிழ் வெல்லும்’ என்று சொல்லித்தான் கையெழுத்திடுவார். இல்லையென்றால், ‘அண்ணா வாழ்க, அண்ணா புகழ் ஓங்குக, பெரியார் வாழ்க’ என்று சொல்லிதான் கையெழுத்திடுவார். ஆகவே, தமிழ் வெல்லும் என்பது தமிழில்தான் எழுதப்பட்டிருக்கிறது. இதைக்கூட அவர் பார்க்காமல், புரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல், இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வாய்த்திருக்கிறார் என்றுதான் வருத்தமாக இருக்கிறது. கேட்கிறார்… “ஏன் ராகுல் காந்தியை அழைக்கவில்லை?” அய்யா எதிர்க்கட்சித் தலைவரே,கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது ஒன்றிய அரசு. அதனால் ஒன்றிய அமைச்சரை அழைத்து அந்த நிகழ்ச்சியை நாங்கள் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம். இதில் பழனிசாமிக்கு எங்கே வலிக்கிறது? அதைத்தான் நான் கேட்கிறேன்.

எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிட்டார்கள். யார் வெளியிட்டார்கள் தெரியுமா? ஒன்றியத்தில் இருந்து யாரும் வரவில்லை. எடப்பாடி பழனிசாமியே வெளியிட்டார். ஏனென்றால், ஒன்றிய அரசு அவரை மதிக்கவில்லை. அவரை ஒரு முதலமைச்சராகவே நினைக்கவில்லை. வர மறுத்துவிட்டார்கள். இதுதான் அவருக்கு இருந்த மரியாதை. இன்றைக்கு நாம் அழைத்த அடுத்த விநாடி ஒரு சொல்கூட தட்டாமல், ஒரு 15 நிமிடம், 30 நிமிடத்திற்கு நடத்திவிட்டு போகவேண்டும் என்று சொன்னதற்கு, 15 நிமிடம் என்ன? எவ்வளவு நேரம் இருந்தாலும் காத்திருந்து அந்த நிகழ்ச்சியை நடத்திவிட்டு போகிறேன் என்று சொல்லிக் கொண்டு வந்தார். அதுதான் திமுகவிற்கு இருக்கக்கூடிய பெருமை; கலைஞருக்கு இருக்கக்கூடிய சிறப்பு.

ராஜ்நாத் சிங்கை நாம் அழைத்ததால் ஏதோ பா.ஜ.வோடு உறவு வைத்துக் கொண்டிருக்கிறோம், உறவு வைக்கப்போகிறோம் என்று ஒரு செய்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள். இது ஊடகத்திற்கு ஒரு தீனி. ஒவ்வொரு ஊடகங்களும், ஒவ்வொரு கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திட்டினாலும் திமுகவைதான், வாழ்த்தினாலும் திமுகவைதான். நாங்கள் எல்லாம் ரகசிய உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை.இந்திரா காந்தியே சொன்னார், கலைஞரை பொறுத்தவரைக்கும், திமுகவை பொறுத்தவரைக்கும் எதிர்த்தாலும் கொள்கையோடு எதிர்ப்பார்; ஆதரித்தாலும் கொள்கையோடு ஆதரிப்பார் என்று சொல்லியிருக்கிறார். எங்களுக்கு அது ஒன்றே போதும். அந்த அளவிற்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட நாங்கள் தீர்மானம் போட்டிருக்கிறோம். முதலில் பழனிசாமி அதைப் படிக்க வேண்டும். பழனிசாமி மாதிரி ஊர்ந்து சென்று, பதுங்கி சென்று பதவி வாங்குகின்ற பழக்கம் திமுகவுக்கு கிடையாது.

எல்லோருக்கும் உரிய மரியாதையை நாங்கள் கொடுப்போம். அதற்காக நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன் அண்ணா மீது ஆணையிட்டு சொல்கிறேன், நமக்கென்று இருக்கக்கூடிய உரிமையை ஒருநாளும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இதுதான் அண்ணாவும், கலைஞரும் நமக்கு அமைத்துத் தந்திருக்கக்கூடிய பாதை. இங்கே கூட உதயநிதி ஸ்டாலின் பேசுகின்றபோது, சங்கருக்கு கோபம் வரும் என்றார். நான் சொல்கிறேன், கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும். கட்சிக்கென்று ஒரு பிரச்னை வருகின்றபோது பெரிய கோபம் வந்தே தீரவேண்டும். அப்படிப்பட்ட ஆற்றலுக்குரியவராக சங்கர் விளங்கிக் கொண்டிருக்கிறார். அந்த சங்கர் இல்லத்தில் நடக்கின்ற இந்த திருமணம், அந்த திருமணத்தில் நானும் உங்களோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிற நேரத்தில் மணமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள். ஏனென்றால், தமிழுக்குச் செம்மொழி என்று பெருமையை பெற்றுத் தந்தவர் கலைஞர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ., 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம் வரவேற்றனர். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, காந்தி, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், கலாநிதி வீராசாமி எம்.பி, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், நந்தகுமார், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், பகுதி செயலாளர்கள் தி.மு.தனியரசு, வை.ம.அருள்தாசன், ஏ.வி.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் ராமநாதன், மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன், அயலக அணி மாவட்ட தலைவர் லயன் எஸ்.டி சங்கர், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார், பரசு பிரபாகரன், பி.எஸ்.இனியவன், ஆகாஷ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் செல்வராஜகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

யோக்கியதை இருக்கிறதா?

அம்மா, அம்மா என்று புகழ்ந்து கொண்டு இருக்கிறார்களே அதிமுகவினர். பாக்கெட்டில் படத்தை வைத்துக் கொண்டு பூஜை செய்து கொண்டிருக்கிறார்களே, அந்த அம்மையார் இறந்து எத்தனை வருடங்கள் ஆகிறது? நான் கேட்கிறேன், இதுவரைக்கும் அந்த அம்மையாரால் வளர்க்கப்பட்டவர்கள், உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தியிருக்கிறார்களா? ஒரு இரங்கல் கூட்டத்தை நடத்துவதற்கு கூட யோக்கியதை அற்றவர்கள், கலைஞருடைய விழாவை பார்த்து விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றுதான் கேட்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* இந்திரா காந்தியே சொன்னார், கலைஞரை பொறுத்தவரைக்கும், திமுகவை பொறுத்தவரைக்கும் எதிர்த்தாலும் கொள்கையோடு எதிர்ப்பார்; ஆதரித்தாலும் கொள்கையோடு ஆதரிப்பார் என்று. எங்களுக்கு அது ஒன்றே போதும்.

* எல்லோருக்கும் உரிய மரியாதையை கொடுப்போம். அதற்காக, நமக்கென்று இருக்கக்கூடிய உரிமையை ஒருநாளும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இதுதான் அண்ணாவும், கலைஞரும் நமக்கு அமைத்துத் தந்திருக்கக்கூடிய பாதை.

You may also like

Leave a Comment

nineteen − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi