திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் பூட்டிக் கிடந்த அரிசி வியாபாரியின் வீட்டின் கிரில்லை உடைத்து புகுந்து 300 பவுன் நகை ₹1 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் வளபட்டணம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அஷ்ரப். அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 19ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்று இருந்தார்.
இதற்கிடையே நேற்று இரவு வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது படுக்கையறையில் பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது லாக்கரில் வைத்து இருந்த 300 பவுன் நகை, ரூ.1 கோடி பணத்தை காணவில்லை. இது குறித்து போலீசில் அஷ்ரப் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். வீட்டின் பின்புறம் உள்ள சமையலறையின் கிரில்லை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் கிரில்லை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.