புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.கொல்கத்தா காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த 13ம் தேதி உத்தரவிட்டது. பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட தினத்தன்று, ஆர்ஜி கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் 4 மருத்துவர்கள் பணியில் இருந்தது.
சிபிஐ விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சந்தீப் கோஷ் உள்பட 5 பேரையும் கைது செய்த சிபிஐ, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள் மற்றும் இறந்து கிடந்த பெண் மருத்துவரின் உடலருகே கண்டெடுக்கப்பட்ட புளூடூத் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சந்தீப் கோஷ் உள்பட 5 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்க கோரி சிபிஐ தரப்பில் கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் சந்தீப் கோஷ் மற்றும் 4 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.