கொல்கத்தா: நிதி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ நேற்று கைது செய்தது. கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் கடந்த ஆக.9ம்தேதி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் 15வது நாளாக நேற்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கொல்கத்தாவில் உள்ள சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவைக் கொண்ட நிஜாம் அரண்மனை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சந்தீப்கோஷ் கல்லூரி முதல்வராக இருந்த காலத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.