புதுடெல்லி: சர்வதேச செய்தி நிறுவனங்களில் ஒன்றான ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கை இந்தியாவில் முடக்குமாறு ஒன்றிய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.
கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட சில செய்தி நிறுவனங்களின் எக்ஸ் கணக்கை முடக்குமாறு ஒன்றிய அரசு எக்ஸ் நிறுவனத்துக்கு வலியுறுத்தியது. ஆனால் கட்டாயப்படுத்தப்படவில்லை. அப்போது பல செய்தி நிறுவனங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கப்பட்டாலும் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு முடக்கப்படவில்லை. இந்த சூழலில் எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம் முன்பு வைத்த கோரிக்கையை இப்போது செயல்படுத்தி உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இந்த சிக்கலை தீர்க்க எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்தார்.