புதுடெல்லி: சம்பளத்தில் 50% தொகையுடன் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் என பல்வேறு உத்தரவாதங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (யுபிஎஸ்) ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் மாற்றம் செய்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு (ஓபிஎஸ்) பதிலாக கடந்த 2004ம் ஆண்டு தேசிய ஓய்வூதிய திட்டம் (என்பிஎஸ்) கொண்டு வரப்பட்டது.
ஏப்ரல் 1, 2004க்குப் பிறகு பணியில் சேரும் அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் பொருந்தும். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு இணையான பலன்களை தேசிய ஓய்வூதிய திட்டம் வழங்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக, உத்தரவாதமான ஓய்வூதியத்தை தேசிய ஓய்வூதிய திட்டம் வழங்காததால், ஓய்வு பெற்ற பிறகு அரசு ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதாக பல தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டது.
எனவே, தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர்களும், ஊழியர் சங்கங்களும் போராட்டங்களை நடத்தின. பாஜ அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இமாச்சல், சட்டீஸ்கர், பஞ்சாப், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறி உள்ளன. இதனால் ஒன்றிய அரசு மீது அழுத்தம் அதிகரித்தது.
அதே சமயம், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என மறுத்த ஒன்றிய பாஜ அரசு, தேசிய ஓய்வூதிய திட்டத்தின் உத்தரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி தாக்கங்களை மதிப்பிடு செய்ய கடந்த ஆண்டு நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. சர்வதேச ஓய்வூதிய முறைகள் மற்றும் ஆந்திர அரசின் ஓய்வூதியக் கொள்கைகளை இக்குழு ஆய்வு செய்து, பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
இதில் சோமநாதன் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) எனும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது குறித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் 23 லட்சம் ஒன்றிய அரசு பணியாளர்கள் பலனடைவார்கள். இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் 5 முக்கிய பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்டவை உறுதி செய்யப்பட்டுள்ளன. 25 ஆண்டுகள் சேவை செய்யும் அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியத்தை பெற தகுதியானவர்கள். 25 ஆண்டுகள் சேவையில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களுக்கான சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதத்தை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.
ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது வாழ்க்கை துணை, கடைசியாக பெறப்பட்ட ஓய்வூதியத்தில் 60 சதவீதத்தை பெறுவார். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி செய்வோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். இதன்படி அவர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.10,000 வழங்கப்படும். தேசிய ஓய்வூதிய திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள், நிலுவைத் தொகையுடன் மார்ச் 31, 2025 வரை ஓய்வு பெற்றவர்களுக்கும், ஓய்வு பெறுபவர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு கூறி உள்ளார். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பு 14 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
* நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது
பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘தேசிய முன்னேற்றத்தில் கணிசமான பங்களிப்பை வழங்கும் அனைத்து அரசு ஊழியர்களின் கடின உழைப்பால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், அரசு ஊழியர்களுக்கு கண்ணியத்தையும் நிதி பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான எங்களின் அர்ப்பணியும் அதில் இணைந்துள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
* உயிரி இ3 கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்
ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், உயிரி தொழில்நுட்பத் துறையின் உயர் செயல்திறன் உயிரி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ‘பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி இ3 கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆராய்ச்சி – மேம்பாடு, தொழில்முனைவோருக்கான புதுமை ஆகியவை இக்கொள்கையின் முக்கிய அம்சமாகும். இது உயிரி உற்பத்தி, உயிரி செயற்கை நுண்ணறிவு மையங்கள், உயிரி பவுண்டரி ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் தொழில்நுட்ப மேம்பாட்டையும் வணிகமயமாக்கலையும் துரிதப்படுத்தும்.
மேலும், அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஒருங்கிணைந்த திட்டமான ‘விஞ்ஞான் தாரா’ என்ற பெயரில் இணைக்கப்பட்ட 3 திட்டங்களைத் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 15வது நிதிக்குழு காலத்தில் ஒருங்கிணைந்த திட்டமான ‘விஞ்ஞான் தாரா’ திட்டத்தை செயல்படுத்த ரூ.10,579.84 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்
* ஒன்றிய அரசு ஊழியராக 10 ஆண்டுகள் பணி செய்வதவருக்கு குறைந்த ஓய்வூதியமாக ஓய்வுக்காலத்திற்குப் பிறகு மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.
* ஓய்வூதியதாரர் உயிரிழந்து விட்டால், அவரது குடும்பத்திற்கு, கடைசியாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் வழங்கப்படும்.
* 25 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியருக்கு, ஓய்வு பெற்ற பின், பணிக்காலத்தில் கடைசி ஓராண்டில் பெற்ற சராசரி அடிப்படைத் தொகையில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.