சென்னை: தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், மக்களுக்கு வழங்குவதற்காக சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் கலந்து கொண்டு ஒப்பந்தம் பெற்ற கே.டி.வி.ஹெல்த் புட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சமையல் எண்ணெய் சப்ளை செய்தது. இந்த வகையில் 141 கோடியே 22 லட்சம் ரூபாய் அரசு தங்கள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளது.
டெண்டர் நிபந்தனைப்படி 30 நாட்களில் இந்த தொகையை வழங்க வேண்டும் என்பதால் நிலுவைத் தொகையை வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கே.டி.வி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தொடர்ந்து சமையல் எண்ணெய் சப்ளை செய்து வருவதால் இத்தொகை 200 கோடி ரூபாய்க்கு மேல் அரசு தர வேண்டியுள்ளது.
தொகையை வழங்காமல் அடுத்த டெண்டர் கோரும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரருக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளி
வைத்தார்.