சில தினங்களுக்கு முன் ஒரு அன்பர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘‘நீங்கள் ஜாதகம் பார்க்கிறீர்களே, ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்கிறீர்களா?’’ என்றார். அவர் ஏன் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டார் என்று விளங்கவில்லை. ஆனால், அதற்கு ஏதோ ஒரு பதிலை அப்போதைக்குச் சொல்லிவிட்டு யோசித்தேன். அவர் கேட்ட கேள்வியில் எத்தனையோ மர்மங்கள் இருக்கின்றன. ஒருவனுடைய ஜாதக பலன்கள் பூர்வ கர்ம வசத்தால் நடந்து வருகிறது.
`ஜனனீ ஜென்ம சௌக்யானாம்
வர்த்தனீ குல சம்பதாம் பதவி பூர்வ புண்யானாம்
லிக்யதே ஜென்ம பத்ரிகா’
இதன் பொருள்: பூமியில் பிறந்துள்ள இந்த ஜீவன் முற்பிறவிகளில், தான் செய்த பூர்வ புண்ணியத்தின் பயனாக இந்த மானுட ஜென்மம் எடுத்து அதற்குரிய பலன்களை அனுபவிக்க இருப்பதனை இந்த ஜாதகத்தில் எழுதப்படுகிறது. அது எப்படி, எப்போது, எந்தக் காலத்தில் நடைபெறும் என்பதை அவர் பிறந்த ஜாதக கிரக நிலைகளும், தசாபுத்திகளும், கோள் சார நிலைகளும் சுட்டிக்காட்டுகின்றன.
இதில் பல்வேறு கணித முறைகள் இருப்பினும், அடிப்படை இதுதான். ஆனால், சிலருக்கு பலன்கள் அப்படியே நடக்கின்றன. சிலருக்கு எதிர்மறையாக நடக்கின்றன. சிலருக்கு மாறிமாறி நடக்கிறது. கிரக நிலைகளில் அனுமானித்து பலன் சொல்வதில் சற்று அனுபவ மாறுபாடுகள் இருப்பினும் கணித முறைகளில் குறைபாடு இல்லை.
பின் என்ன காரணம்?
30 வருடங்களுக்கு முன், சந்தித்த ஒரு ஜோதிடப் பெரியவர் சொன்னார். “எடுத்த எடுப்பில் கிரகநிலை அமைப்பைக் கொண்டு பலன் சொல்ல முயல்வது பல நேரங்களில் சரியாக வராது. எனவே எந்தெந்த கிரகங்கள் ஜாதகருக்கு மைத்திரமாக (நட்பாக, ஆதரவாக) இருக்கின்றன; எந்தெந்த கிரகங்கள் விரோதியாக இருக்கின்றன என்பதை, அவருக்கு நடைபெற்று வரும் பலாபலன்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, நிதானித்துத் தான் பலன் சொல்ல வேண்டும்’’ என்றார்.
ஏழாம் இடத்து செவ்வாயும், அஷ்டமத்துச் சனியும் எல்லோருக்கும் ஒரே விதமாக பலன் தருவதில்லை என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். அதனால் ஒரு ஜோதிட நண்பர் ஒரு சூத்திரம் சொன்னார். ‘‘ஜாதகம் பார்த்து பலன் சொல்வது இருக்கட்டும். பலன் பார்த்து ஜாதகத்தை முதலில் நிச்சயித்துக் கொள்ளுங்கள்’’ என்றார். ஜாதக பல நிர்ணய விஷயத்தில் இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று பாவ காரகத்துவம், இன்னொன்று கிரக காரகத்துவம் உதாரணமாக, ஒருவனுக்கு நடத்தை, குணம், ஆரோக்கியம், அனுபவிப்பதில் குறைபாடு என எல்லாமே எதிர்மறையாக இருந்தால் அவருக்கு லக்ன பாவமும், ராசி பாவமும் வெகுவாக பாதித்திருக்கிறது என்று பொருள்.
இவைகளை அவருடைய பிறந்த ஜாதகத்தின் லக்னபாவம் சரியாக குறிகாட்டாவிட்டால் நிச்சயம் ஜாதகத்தில் பிழை இருக்கிறது, பிறந்த நேரம் சரியாக இல்லை என்று பொருள். அல்லது ஜாதகத்தில் எப்படி இருப்பினும் ஏதோ ஒரு சூட்சும விதிப்படி அவருடைய லக்னபாவம் அவருக்கான சுப பலன்களைத் தடுக்கிறது என்றே முடிவுக்கு வர வேண்டும். வெறும் ஜாதகத்தை வைத்துக்கொண்டு, “நீங்கள் இந்திர வாழ்வு வாழ்வீர்கள், சந்திர வாழ்வு வாழ்வீர்கள்” என்றால் அது நேர்மாறாக இருக்கும். இதை நான் சில நண்பர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.
எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவர் வேலைக்குச் சேர்வதன் முன்னம் தனக்கு மிகுந்த யோகம் இருப்பதாகவும், பெரும் அதிர்ஷ்டம் காத்திருப்பதாகவும் ஜோதிடர் சொன்னதாக சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் நடைமுறைப் பலன் எதிர்மாறாக இருந்தது. அவருக்கு நல்ல வேலை கிடைத்தும் பண விஷயத்தில் ஏதோ ஒரு சிக்கலைச் செய்து, பணி நீக்கம் செய்யப்பட்டார். கெட்ட பெயரோடு கிடைத்த நல்ல வாழ்க்கையையும் வீணாக்கினார்.
பகைகளில் நேர் எதிரி, நண்பனைப் போல இருக்கும் துரோகி என்று இருவகை உண்டு. லக்னம் பலவீனமாக அடிபட்டுக் கெட்டிருந்தால் நேர் எதிரி. ஆனால், லக்னம் நன்றாக இருப்பது போல் மேலுக்கு தெரிந்து, பலன்கள் மாறாக இருந்தால் துரோகி என்றே நிர்ணயிக்க வேண்டும்.
துரோகி பலன்களை வைத்தே நிதானித்து தீர்மானிக்க வேண்டும். சட்டென்று முடிவுக்கு வந்துவிட முடியாது. இப்போது இன்னும் ஒரு விஷயத்தை சொல்கிறேன். உங்கள் ஜாதகத்தைப் பார்த்து செவ்வாய் தோஷம் என்று ஒரு ஜோதிடர் சொல்லிவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது சரியா என்பதை பலன்களில் இருந்தும், குணங்களிலிருந்தும் தெரிந்து கொள்ளுங்கள். செவ்வாய் நேர்மறையாக வலுப்பெற்று இருந்தால்,
1. சகோதர பாசம் இருக்கும்.
2. நிலம், வீடு சொந்தமாக இருக்கும்.
3. ரியல் எஸ்டேட் பிசினஸ் நன்றாக நடக்கும்.
4. மிகுந்த தைரியசாலியாகவும் துணிச்சலும் உடையவர்களாக இருப்பார்கள்.
5. போலீஸ் வேலைகளிலும் ராணுவம் போன்ற சீருடை வேலைகளிலும் முக்கிய பொறுப்பில் இருப்பார்கள்.
6. பேச்சில் கம்பீரம் இருக்கும்.
7. உடல் வலிமை மிகுந்து இருக்கும்.
8. பெண்ணாக இருப்பின் தைரியமாக குடும்பத்தை நடத்தும் பெண்ணாக, கொள்கை முடிவு எடுக்கும் பெண்ணாக (decision making) இருப்பீர்கள். கணவன் அன்பு கொண்டவராக இருப்பார். பரஸ்பர ஒற்றுமை இருக்கும்.
9. அதிகாரப் பதவிகள் தானாக வரும். குறைந்தபட்சம் ஒரு கவுன்சிலர் பதவியிலாவது இருப்பீர்கள்.
10. அறுவை சிகிச்சை மருத்துவராகும் வாய்ப்பும் அதிகம். ஆனால், செவ்வாய் எதிர்மறை விளைவுகள் தரும் அமைப்பில் இருந்தால் அதனை “செவ்வாய் தோஷம்” என்று சொல்லலாம். எந்தக் கிரகம் எதிர்மறை வேலை செய்தாலும், செய்யும் அமைப்பில் இருந்தாலும், அது அந்தந்த கிரக தோஷம்தான். குரு தோஷம், சுக்கிர
தோஷம், சந்திரதோஷம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், நாம் செவ்வாய் தோஷத்தைத்தான் முக்கியமாகக் கருதுகிறோம். அது ஏன் என்று தெரியவில்லை.
சரி, செவ்வாய் தோஷத்திற்கு நாம் பார்ப்போம்.
1. அடிக்கடி கோபம் வருதல், தன்னிலை இழத்தல்.
2. கோபத்தின் விளைவு பயங்கரமாக இருத்தல்.
3. ரத்த அழுத்தம், டென்ஷன், பதற்றம்.
4. சகோதரர்களுடன் வெட்டு, குத்து என்கிற விரோதம்.
5. கல்யாணம் ஆகி இருந்தால், அவ்வப்போது கணவன் மனைவி கோபம் உரசல், விலகல்.
6. ஒரு சின்ன காரணம் கிடைத்தாலும், மேலும் மேலும் சண்டைக்குப் போவதில் ஆர்வம்.
7. சண்டையே இல்லாவிட்டால் மனம் சமாதானம் அடையாமல் இருத்தல்.
8. தவறான, அலட்டலான, அதட்டலான பேச்சு, மரியாதைக் குறைவான பேச்சு.
9. வெட்டு, குத்து, அடிதடி என்று ஈடுபடுதல்.
10. இருக்கும் வீட்டையும் விட்டுவிட்டு முடங்கிப் போதல்.
11. பாதி வீட்டை கட்டும்போதே அந்த வீட்டை விட்டுவிட்டு வாடகை வீட்டுக்கு போதல்.
12. உடம்பில் காயம், அறுவை சிகிச்சை, சிறு விபத்துக்கள் அடிக்கடி ஏற்படும் சூழல்.
13. பெண்களுக்கு எந்த ஆணைப் பார்த்தாலும் பிடிக்கவில்லை என்று சொல்லுதல்.
14. ஆண்களுக்கு பெண்களிடம் சந்தேகம், அதன்பின் வரும் தகராறுகள்.
இதைப் போன்ற காரணங்கள் இருந்தால், கட்டாயம் உங்கள் செவ்வாய் தோஷம் வேலை செய்கிறது என்று அர்த்தம். பெரும்பாலும் இது ஜாதகத்தில் பிரதிபலிக்கும். பிரதிபலிக்காவிட்டால் ஜாதகக் குறிப்பை மறுபடியும் ஆராய வேண்டும்.
தொகுப்பு: தேஜஸ்வி