மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை மீனவமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் இசிஆர் சாலையொட்டி சாலவான்குப்பம், இளந்தோப்பு, பட்டிபுலம், கிருஷ்ணன் காரணை, நெம்மேலி, புதியகல்பாக்கம், கடம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெம்மேலியை சேர்ந்த ஆளவந்தாருக்கு 1054 ஏக்கர் சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் பாதுகாத்து பராமரித்து வருகிறது. இந்நிலையில், ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்கள் சில இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனை, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம், ஆக்கிமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி மீட்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இதனைதொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை மீட்டு, அறக்கட்டளை கணக்கில் கொண்டு வர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று மதியம் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் மீனவர் கிராமத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள 18 வீடுகளில் இருந்த பொருட்களை வெளியேற்றி சீல் வைப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் தலைமையில், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல் முன்னிலையில், அதிகாரிகள் பலர் வந்தனர்.
அப்போது, அதிகாரிகள் போலீசார் உதவியோடு மீனவர் குப்பத்துக்கு செல்ல முயன்றனர். அவர்களை, மீனவமக்கள், பட்டிப்புலம் கிராம மக்கள், பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு அதிகாரிகளை ஊருக்கு வெளியே தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல விடாமல் வழிமறித்தனர். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது, அப்போது இருந்த கலெக்டரின் அனுமதி பெற்று வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனை, எப்படி இடிக்கலாம் என அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர சற்று கால அவகாசம் வேண்டும் எனவும், அதுவரை எங்கள் வீடு அகற்றவும், சீல் வைக்கவும் கூடாது என கடும் வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு, உயர்நீதிமன்ற உத்தரவுபடி தான் நாங்கள் ஆக்கிரப்மிப்புகளை அகற்ற வந்ததாகவும், வரும் 28ம் தேதி இது சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் வர உள்ளது. உங்கள் தரப்பில் இருந்து வழக்கறிஞர் ஆஜராகி உங்கள் நியாயத்தை கூறலாம் என தெரிவித்து, கால அவகாசம் வழங்கி அதிகாரிகள் புறப்பட்டனர். அசம்பாவிதம் ஏற்படாதவாறு மாமல்லபுரம் போலீல் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில், 40க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி மீனவ மக்கள் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.