குன்னூர்:குன்னூர் அருகே இரவு நேரத்தில் கிராமத்தில் உலா வந்த சிறுத்தையால் மக்கள் பீதியடைந்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நெடிக்காடு என்னும் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகளும், அரசு மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் குடியிருப்பு பகுதியில் உள்ள 3 மின்கம்பங்களில் தெருவிளக்கு பொருத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதி மக்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதை அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுனர் ஒருவர் தனது வாகனத்தில் இருந்தவாறு செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், நெடிக்காடு கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே வனவிலங்குகள் கிராமத்திற்குள் உலா வருவதை வனத்துறையினர் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.