*அதிகாரிகள் சமரசம்
பாப்பிரெட்டிப்பட்டி : பொம்மிடி அருகே குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்யக்கோரி, மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்டம், பொம்மிடி ஊராட்சியில் வடசந்தையூர், சாலவலசு, கொட்டாவூர், குப்பனூர், பொம்மிடி, நடூர் உள்ளிட்ட 18 கிராமங்கள் உள்ளன. இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வடசந்தையூர் நான்கு ரோட்டில், நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் 4 பள்ளிவாசல்கள் உள்ளன. இப்பகுதியில் டாஸ்மாக் கடை, கடந்த 10ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இந்த கடைக்கு வருபவர்கள் மது குடித்துவிட்டு, தினமும் தகராறில் ஈடுபடுவதும், சாலையில் பாட்டிலை உடைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இவ்வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பெண்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், மது அருந்துபவர்கள் பெண்களை கேலி, கிண்டல் செய்கின்றனர். எனவே, இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து பலமுறை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று மதியம் 12மணியளவில் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரூர் போலீஸ் டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், அங்கு வந்த தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கேசவன், உதவி ஆணையர் நர்மதா, கோட்ட ஆய அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10 நாட்களில் கடையை இடமாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதன் பேரில், மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.