கம்பம்: குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை தாக்கி வனக்காவலர் படுகாயம் அடைந்தார். தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள கம்பம் நகராட்சி, 1வது வார்டு, கோம்பை ரோடு குடியிருப்பு பகுதியில் உள்ள புதரில் சிறுத்தை பதுங்கியிருப்பதை அப்பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் பார்த்துள்ளார். அப்போது திடீரென அவர் மீது, சிறுத்தை ஆக்ரோஷமாக பாய்ந்துள்ளது. இதில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார்.
பின்னர் அங்கிருந்த நாய்கள் குரைக்கவும், சிறுத்தை தப்பியோடியது. தகவலறிந்து வனத்துறையினர் அங்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது, புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை வன காப்பாளர் ரகுராம் பாண்டியனை தாக்கியது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுத்தையை பிடிப்பதற்காக தேனி மாவட்ட வனத்துறையினர் கோம்பை ரோட்டு பகுதியில் முகாமிட்டுள்ளனர். சிறுத்தையை பிடிப்பதற்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக மதுரையிலிருந்து சிறப்பு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.