*சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தகவல்
ஊட்டி : ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மழைக்காலங்களில் தடையின்றி குடிநீர் வழங்க பார்சன்ஸ்வேலி நீரேற்று மையத்திற்கு ரூ.6 கோடி செலவில் நிலத்தடி மின்கேபிள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என சட்டமன்ற பேரவையின் உறுதிமொழி குழு தெரிவித்துள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் வேல்முருகன்எம்எல்ஏ தலைமை வகித்தார். குழுவின் உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்களான அருள்,நல்லதம்பி,மோகன்,ஜெயகுமார் மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வருவாய்த்துறை,நகராட்சி நிர்வாகத்துறை,ஊரக வளர்ச்சி முகமை,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,மாவட்ட தொழில் மையம், கால்நடை பராமரிப்புத்துறை,ஆவின்,தமிழ்நாடு மின்சார வாரியம், சுற்றுலாத்துறை,கூட்டுறவுத்துறை,மாசு கட்டுப்பாட்டு வாரியம் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பின்னர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் வேல்முருகன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதி மொழிக்குழு பல்வேறு இடங்களில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டது. முதலாவதாக ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளும்,நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன், சி.டி.ஸ்கேன்,ஆக்ஸிஜன் சிலிண்டர் பிளாண்ட் உள்ளிட்டவற்றையும் நேரில் பார்வையிடபட்டு, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊட்டி காக்காத்தோப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள குடியிருப்பு பகுதிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை குழுவிற்கு கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பார்சன்ஸ் வேலி அணை பார்வையிடப்பட்டது. கனமழை மற்றும் இயற்கை பேரிடரின் போது மின்கம்பங்களில் மரங்கள் சாய்ந்து குடிநீர் வழங்க தடை ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் தரைவழி மின் கேபிள் அமைக்க வனத்துறை அனுமதி கோரப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பின்னர், ஊட்டி நகராட்சி காந்தள் பகுதியில் பார்வையிடப்பட்ட அறிவுசார் மையத்தின் மூலம் போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவிகளின் தேவையையும்,கல்வி வழிகாட்டுதலையும் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக ஏற்படுத்தி தந்துள்ளார்.
அதேபோல்,மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், நோயாளிகளின் இல்லங்களுக்கு சென்று மருந்து பெட்டகங்கள் வழங்கப்படுவதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பணியாளர்களிடம் கேட்டறிந்து, களஆய்வு செய்து உறுதி செய்யப்பட்டது.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுக்களில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட 76 உறுதி மொழிகளில் 36 நிறைவு பெற்று,பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.ஒரு உறுதிமொழி படித்து, பதிவு செய்யப்பட்டது. எஞ்சியுள்ள மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்காக நிலுவையிலுள்ளது.
2001ம் ஆண்டிற்கு பிறகு வழங்கப்பட்ட 50 உறுதி மொழிகளில் 18 நிறைவேற்றப்பட்டு,உறுதிமொழி பட்டியலிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. ஒரு உறுதிமொழி படித்து, பதிவு செய்யப்பட்டது. எஞ்சியுள்ள 31 உறுதிமொழிகள் நிலுவையிலுள்ளது. இதன் மூலம் சட்டப்பேரவை உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதி மொழிக்குழுவின் பணியை நாங்கள் செய்திருக்கிறோம்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு பணிகளின் போது, அனைத்துத்துறை அலுவலர்களும் பணி சுணக்கம் இல்லாமல் எவ்வித கண்டிப்பிற்கும் ஆளாகாமல் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்கள். அவர்களுக்கு எங்களது குழுவின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
கூட்டத்தில், எஸ்பி., நிஷா, கூடலூர் எம்எல்ஏ., பொன்ஜெயசீலன்,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக்,முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ்,துணை இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பகம்) வித்யா,மாவட்ட வன அலுவலர் (ஊட்டி) கௌதம், கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு,தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழுவின் இணைச் செயலாளர் கருணாநிதி,துணைச் செயலாளர் ரவி,சார்புச் செயலாளர் பியூலஜா உட்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.