சென்னை: ரிசர்வ் தொகுதிகளையும் ஒழிக்கப் போகிறார்களா? என விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதற்கான உச்சநீதி மன்றத்தின் முதல் தாக்குதல். தற்போது உள் ஒதுக்கீடு தொடர்பாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இட ஒதுக்கீட்டின் மீதான உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது தாக்குதல்.
அசோக் குமார் ஜெயின் என்பவர் தொடர்ந்த வழக்கில் ‘ ரிசர்வ் தொகுதிகளை நீட்டிப்பது அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 334 க்கு உகந்ததுதானா? ‘ என்பதை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளிக்கப்போகும் தீர்ப்பு இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழித்துக்கட்டும் இறுதித் தாக்குதலாக இருக்கப் போகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான பாஜகவின் திட்டத்தை முறியடிக்க புரட்சியாளர் வகுத்துத் தந்த பாதையில், தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடும்.
EWS இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விசிக வழக்கு நடத்தியது. இப்போது உள் ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்தும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. விசிகவின் போராட்டம் இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கானது. இட ஒதுக்கீட்டையே ஒழிக்க முயற்சிப்பவர்களின் தூண்டுதலில் விசிகவை எதிரியாகக் கட்டமைத்து அவதூறு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: விசிகவின் போராட்டம் உங்களுடைய இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கானதும் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.