டெல்லி : நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) தனிநபர்களுக்கு தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பான 9 புதிய விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அடகு வைக்கும் தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடனாக வழங்க வேண்டும், நகைகளுக்கான உரிமை ஆவணங்களை கடன் பெறுவோர் சமர்ப்பிக்க வேண்டும், தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும், நகைகளின் தரம் கட்டாயம் 22 கேரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும், உள்ளிட்ட நிபந்தனைகள் இதில் அடங்கி உள்ளன.
இந்த நிலையில், நகைக் கடன் வழங்க 9 நிபந்தனைகளை விதிக்கப்பட்டதற்கும் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ரிசர்வ் வங்கி விதித்த 9 கட்டுப்பாடுகளால் ஏழை மக்கள்பெரிதும் பாதிக்கப்படுவர் என்று எதிர்ப்பு எழுந்தது. நகைக்கடன் கட்டுப்பாடுகளை திரும்பப் பெறக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினும் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் எதிரொலியாக நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. நகைக்கடன் நிறுவனங்கள், பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில் விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது. சிறிய தொகைக்கு நகைக்கடன் பெறுவோர் பாதிக்கப்படாதவாறு, புதிய விதிமுறைகளில் சில பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் கூறியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக நகைக்கடன் பெறுவோர், இந்த புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி இதனை பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளது.