புதுடெல்லி: 2015ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ரயில்களில் முன்பதிவு தொடர்பான அட்டவணை ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியாகும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. தற்போது முன்பதிவு அட்டவணை 8 மணி நேரத்திற்கு முன்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குழப்பம் ஏற்பட்டுள்ளதால் முன்பதிவு அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு அட்டவணை முந்தைய நாள் இரவு 9 மணிக்கு வெளியாகும். மற்ற ரயில்களுக்கு 8 மணி நேரத்திற்கு முன்பே பட்டியல் வெளியிடப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தேவையான வழிமுறைகளை வழங்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் எப்போது இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் எந்த திட்டவட்டமான தேதியையும் குறிப்பிடவில்லை.
ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பு அட்டவணை தயாரானதும், இருக்கைகள்/பெர்த்கள் இன்னும் காலியாக இருந்தால், பயணிகள் நடப்பு முன்பதிவு வசதிகளின் கீழ் அவற்றை முன்பதிவு செய்யலாம். இரண்டாவது முன்பதிவு அட்டவணை ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்களுக்கு முன்பு வரை தயாரிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.